பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா `திடீர்' சந்திப்பு `அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணையும்' என பேட்டி


பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா `திடீர் சந்திப்பு `அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணையும் என பேட்டி
x

பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சசிகலா நேற்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணையும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க அ.தி.மு.க.வை மீட்க போவதாக சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். கட்சியின் மூத்த நிர்வாகிகள், முக்கிய தலைவர்கள், தொண்டர்களையும் சந்தித்து வருகிறார்.

இந்தநிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக்நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் சசிகலா நேற்று திடீரென சந்தித்தார். அப்போது சசிகலாவை பூங்கொத்து கொடுத்து பண்ருட்டி ராமச்சந்திரன் வரவேற்றார். பின்னர் சால்வை அணிவித்து, பண்ருட்டி ராமச்சந்திரனிடம் சசிகலா நலம் விசாரித்தார்.

திடமான நம்பிக்கை

பண்ருட்டி ராமச்சந்திரன் உடனான சந்திப்புக்கு பிறகு, சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பண்ருட்டி ராமச்சந்திரன் எனது மூத்த அண்ணன். அதனால் அவரை பார்க்க வந்தேன். அரசியல் விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறேன். நானும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படவேண்டும் என்று தொண்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அ.தி.மு.க.வில் உள்ள அனைவருமே எனக்கு வேண்டியவர்கள் தான். எல்லோரும் இணைந்து ஒன்றாக பயணிக்கவேண்டும் என்பது தான் என் விருப்பம்.

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது சாதி, மதம் என்றெல்லாம் பார்த்ததில்லை. அந்த அடிப்படை கொள்கை இப்போதும் எங்கள் மனதில் உள்ளது. அ.தி.மு.க. அனைவரையும் ஒன்றாக நினைக்கும் இயக்கம். அந்த வழியில் தான் இந்த கட்சியை நான் எடுத்து செல்வேன். கட்சி என்றால் நிறுவனம் கிடையாது. அ.தி.மு.க. அனைவருக்குமான இயக்கம். அதை நிலைநிறுத்துவது தான் எனது கடமை. அதை நிச்சயம் செய்வேன். காலப்போக்கில் அனைத்தும் சரியாகும் என்பது என் திடமான நம்பிக்கை.

அ.தி.மு.க. மீண்டும் இணையும்

கட்சியில் பிளவும், இணைப்பும் எம்.ஜி.ஆர். காலத்தில் நிகழ்ந்தது தான். அது இப்போதும் நிகழும். நிச்சயம் அது நடக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் பிளவுபட்ட கட்சி ஒன்றாக இணையும். நான் எந்த பக்கமும் இல்லை. தொண்டர்கள், மக்கள் நினைப்பதே எனது செயல்பாடாக இருக்கும். பொதுமக்கள் எங்களை மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.

தேர்தல் அறிக்கையில் கூறியதை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அதேவேளை ஜெயலலிதா கொண்டுவந்த ஏழை மக்களுக்கான திட்டங்களையும் நிறுத்தியிருக்கிறார்கள் என்று மக்கள் புலம்புகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து இதையெல்லாம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் இதை செய்வேன் என்று உறுதி அளித்திருக்கிறேன். எனது தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணையும். தொண்டர்கள் எண்ணம் எதுவோ, அதுவே நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒற்றை தலைமையால் சாதித்தது என்ன?

இதையடுத்து பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க. என்பது ஏழைகளுக்கான கட்சி. அந்த கட்சியில் யார் வேண்டுமென்றாலும் சேரலாம். அனைவருக்கும் சம வாய்ப்பு உண்டு. ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என்பதும் முக்கியமில்லை. ஒற்றை தலைமை வந்து என்ன சாதித்துவிட்டார்கள்? இடைக்காலம் என்பது தற்காலிகம். நிரந்தரம் கிடையாது. பொதுச்செயலாளர் யார் என்பது முக்கியமல்ல. மக்கள் யார் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்? என்பதே முக்கியம். ஓ.பன்னீர்செல்வம் தனிமைப்படுத்தப்படுகிறாரா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆற்றில் நுரை போல மேலே இருப்பதை பார்க்கிறோம். கீழ்மட்டத்தில் என்ன முடிவு எடுக்கிறார்கள்? என்பதே முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

ஏற்கனவே பண்ருட்டி ராமச்சந்திரனை கடந்த ஜூன் மாதம் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கு சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படவேண்டும் என்று தேவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் உடனான சசிகலாவின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story