சசிகலாவின் எஸ்டேட் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு


சசிகலாவின் எஸ்டேட் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Oct 2023 10:30 PM GMT (Updated: 3 Oct 2023 10:30 PM GMT)

கோத்தகிரி அருகே சசிகலாவின் தேயிலை எஸ்டேட் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி அருகே சசிகலாவின் தேயிலை எஸ்டேட் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேயிலை எஸ்டேட்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட் உள்ளது. இதேபோல் கோடநாடு செல்லும் வழியில் எஸ்.கைகாட்டி அருகில் சசிகலாவுக்கு சொந்தமான கர்சன் எஸ்டேட்(கிரீன் டீ எஸ்டேட்) உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கோடநாடு எஸ்டேட்டில் புகுந்த கும்பல், அங்கு பணியில் இருந்த காவலாளியை கொன்று விட்டு பங்களாவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு, அந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கர்சன் எஸ்டேட் வளாகத்தில் உள்ள அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

யானை உடைத்தது

இது திருட்டு முயற்சியாக இருக்குமோ என அலுவலர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து சோலூர்மட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் கண்ணாடிகள் உடைந்து இருந்த இடத்தில் கரடியின் முடிகள் இருப்பது போல காணப்பட்டது. இதனால் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் நள்ளிரவில் காட்டு யானை வந்து கண்ணாடிகளை உடைத்து, அங்கு உணவு பொருட்கள் ஏதேனும் உள்ளதா என சற்று நேரம் தேடி பார்த்து விட்டு திரும்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதன் மூலம் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது திருட்டு முயற்சிக்காக இல்லை என்பதும், காட்டு யானை தான் கண்ணாடிகளை உடைத்தது என்பதும் தெரியவந்தது. இதனால் அலுவலர்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story