மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க கோரி சதாசிவம் எம்.எல்.ஏ. காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்

மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க கோரி சதாசிவம் எம்.எல்.ஏ. காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மேட்டூர்:
மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படும் நேரங்களில் உபரி நீர் வீணாக வெளியேறுவதை தடுக்கும் வகையில் மேட்டூர் அருகே அமைந்துள்ள திப்பம்பட்டி பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அங்குள்ள ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு தண்ணீரை அனுப்பி வைப்பதற்காக திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ள வரும் நிலையில் இந்த உபரி நீர் திட்டத்திற்கு தண்ணீரை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மேட்டூர் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவம் நேற்று நீரேற்று நிலையம் அமைந்துள்ள திப்பம்பட்டி பகுதிக்கு நேரில் சென்று காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இதில் பா.ம.க. மாவட்ட செயலாளர் ராஜசேகரன், மேச்சேரி ஒன்றிய செயலாளர் சுதாகர், மகளிர் அணியினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். பா.ம.க. எம்.எல்.ஏ. காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதை அறிந்த மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் உபரி நீர் திட்ட அதிகாரிகள் திப்பம்பட்டி பகுதிக்கு விரைந்து சென்று சதாசிவம் எம்.எல்.ஏ. உடன் சமரசம் பேசினர். இது குறித்து தமிழக அரசிடம் பேசி உபரி நீரை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த பின்பு சதாசிவம் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கரைக்கு திரும்பினார்.