கடலூரில் சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்


கடலூரில் சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Oct 2023 7:00 PM GMT (Updated: 26 Oct 2023 7:00 PM GMT)

கடலூரில், மறியலில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வருவாய் கிராம ஊழியர்களுக்கு வழங்குவது போல் ரூ.6750-யை அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த காலை உணவு திட்டத்தை சத்துணவு மையங்களிலேயே சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்.

அரசுத்துறை காலி பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் 50 சதவீத பதவி உயர்வு வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சத்துணவு-அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

மறியல் போராட்டம்

அதன்படி கடலூரில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்கள் வர தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதன்பிறகு பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, தங்கவேல், பரமசிவம், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மாநில செயலாளர் குணா, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் மணிதேவன், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

48 பேர் கைது

இதில் நிர்வாகிகள் அறிவழகன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 48 பேரை கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்து, மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story