சத்தியமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு


சத்தியமங்கலம்  போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
x

சத்தியமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கடன்

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 55). இவருடைய மகள் வளர்மதி மற்றும் மருமகன் கதிர்வேலு.

இவர்கள் வீடு கட்டுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு சிக்கரசம்பாளையத்தில் உள்ள செந்தில், செல்வி ஆகிய தம்பதியிடம் இருந்து ரூ.2½ லட்சம் மற்றும் 4 பவுன் நகை கடனாக வாங்கி உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக செந்தில், செல்வி ஆகியோர் பிரிந்து விட்டனர்.

விசாரணை

செந்தில் மற்றும் அவருடைய மனைவி செல்வி ஆகிய 2 பேரும் வாங்கிய கடனை தங்களிடம் தனித்தனியாக கொடுக்க வேண்டும் என கூறி வந்து உள்ளனர். மேலும் சூழ்நிலை காரணமாக கடனை திருப்பி கொடுக்க முடியாததால் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என வளர்மதி, கதிர்வேலு ஆகியோர் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடனை திருப்பி தரவில்லை என சத்தியமங்கலம் போலீசில் செல்வி புகார் அளித்து உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்து உள்ளனர்.

மேலும் இதுகுறித்து விசாரிக்க வளர்மதி மற்றும் கதிர்வேலு ஆகியோரை தனது அலுவலகத்துக்கு அழைத்து சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு விவரம் கேட்டதாக தெரிகிறது.

தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி முதல் வளர்மதி மற்றும் கதிர்வேலு ஆகியோர் திடீரென காணாமல் போய்விட்டார்கள். இதனால் அவர்களை வளர்மதியின் தாய் கிருஷ்ணவேணி பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கிருஷ்ணவேணி வந்தார். பின்னா் அவர் தான் கொண்டு வந்த கேனை எடுத்து அதில் உள்ள மண்எண்ணெயை தன்னுடைய உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் ஓடிச்சென்று கிருஷ்ணவேணி வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதுகுறித்து கிருஷ்ணவேணி கூறுகையில், 'துணை போலீஸ் சூப்பிரண்டு மிரட்டல் காரணமாக எனது மகளையும், மருமகனையும் காணவில்லை. அவர்களை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும்,' என கூறினார். இதுகுறித்து கிருஷ்ணவேணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story