பரிசு விழுந்துள்ளதாக கூறி கிராம மக்களிடம் மோசடி; 14 பேர் கைது
சோப்பு வாங்கியதில் பரிசு விழுந்துள்ளதாக கூறி கிராம மக்களிடம் மோசடி செய்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பரிசு டோக்கன்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் டேவிட் மனைவி ரோஸ்லின்(வயது 45). இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 பேர் வந்து நாங்கள் சோப்பு விற்பனை செய்து வருவதாகவும், இந்த சோப்பை வாங்கினால் பரிசு டோக்கன் கிடைக்கும் இதன் மூலம் பல பரிசுகள் வெல்லலாம் என நம்ப வைத்து சோப்பை விற்பனை செய்துள்ளனர்.
அதன்படி முதலில் உங்களுக்கு ரூ.7,000 மதிப்பிலான குக்கர் மற்றும் குத்துவிளக்கு பாதி விலையில் பரிசாக விழுந்தது என கூறி ரூ.3,500 அவரிடம் பெற்றுக்கொண்டு குக்கரையும், குத்துவிளக்கையும் அளித்துள்ளனர். பின் மேலும் பல்வேறு பரிசுகள் உங்களுக்கு விழும் நம்பிக்கையோடு இருங்கள் எனக்கூறி சென்றுவிட்டனர். பின் சில தினங்களுக்குப்பிறகு அவருக்கு போன் செய்து மீண்டும் உங்களுக்கு ஸ்கூட்டரும், 16 கிராம் தங்ககாசும் பரிசாக விழுந்துள்ளது எனக்கூறி அதற்கான ஜி.எஸ்.டி. தொகை ரூ.14 ஆயிரத்து 850 மட்டும் கட்டுங்கள் நாளை உங்கள் வீடு தேடி எங்கள் அலுவலர்கள் 10 பேர் வந்து பரிசு அளிப்பார்கள் எனக் கூறியுள்ளனர்.
மோசடி
முதலில் இது ஏமாற்று வேலையாக இருக்கும் என சந்தேகப்பட்ட அவர் பணம் கட்டாமல் மறுத்துள்ளார். பின் 10 பேர் அவரது வீட்டிற்கே வந்து உண்மைதான் என்பது போல் நம்ப வைத்துள்ளனர். இதையடுத்து இருந்த போதிலும் ரோஸ்லின் அவர்களிடம் பெயர் விலாசம் முகவரி என அனைத்தையும் வாங்கிக் கொண்டு பணத்தை கட்டியுள்ளார். பின்னர் பணம் கட்டி பல நாட்கள் ஆகியும் எந்த பரிசும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். மேலும் இதே கும்பல் இதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் இதுபோன்று ஏமாற்றுவதாக அவருக்கு தகவல் கிடைத்ததையடுத்து கீழப்பழுவூர் போலீசில் இந்த மோசடி கும்பல் குறித்து புகார் அளித்தார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த அவர்கள் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு மற்றும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த விவேகானந்தம்(50), தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சின்ன ராமசாமி(65), குருநாதன்(30), எசக்கிமுத்து(65), சின்ன சுடலை(37), சேலம் மாவட்டம் குறிஞ்சி நகரை சேர்ந்த சண்முகவேல்(30), ரஞ்சித்குமார்(31), முப்பிடாதி (28), சுரேஷ்குமார்(48), மாரியப்பன்(50), ஜெயக்குமார்(42), காளிமுத்து(32), விவேகானந்தன்(55), திருநெல்வேலியை சேர்ந்த மாடசாமி(34) ஆகிய மோசடியில் ஈடுபட்ட 14 பேரையும் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்று பொதுமக்களை ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுபவர்களிடம் இருந்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.