காசநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்குஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் காசநோயால் சுமார் 1,647 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 93 பேருக்கு தீவிர பாதிப்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 65 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 7 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 52 பேர் நல்ல உடல் முன்னேற்றத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் 10 சதவீத காசநோயாளிகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதால், அவர்களால் உணவு கூட உண்ண முடியாத நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்காக எப்-75 என்கிற ஊட்டச்சத்து உணவு முறையானது நாமக்கல்லில் தொடங்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் காசநோய் மையத்தில் மாவட்ட துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் வாசுதேவன், நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவ அலுவலர் செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் காசநோய் மைய மருத்துவ அலுவலர்கள் ஆனந்த்குமார், வினோதினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.