அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்குரூ.1,000 உதவித்தொகை- ஆசிரியர்கள் வழங்கினர்
திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகையை ஆசிரியர்கள் வழங்கினர்.
திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகையை ஆசிரியர்கள் வழங்கினர்.
பாரம்பரியம் மிக்க பள்ளி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 130 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த பள்ளியில் படித்த பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகி உள்ளனர்.
இந்த பள்ளியில் தான் முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்டோர் படித்துள்ளனர். பாரம்பரியம் மிக்க இந்த பள்ளியில் சமீப காலமாக மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே காணப்பட்டது. காரணம் தனியார் பள்ளிகள் மீது மக்கள் காட்டிய மோகம் ஆகும்.
ரூ.1,000 உதவித்தொகை
தற்போது அரசு பள்ளியில் படிப்பவர்கள் மருத்துவ படிப்பில் சேருவது அதிகரித்து இருப்பதால் பெற்றோரின் பார்வை அரசு பள்ளிகள் மீது மீண்டும் திரும்பி உள்ளது. இதை ஊக்குவிக்கும் விதமாக திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகன் (பொறுப்பு), ஆசிரியர்கள் நடராஜன், பாஸ்கரன், முகமது ரபிக் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ரூ.1,000 உதவித்தொகை வழங்கி வருகிறார்கள்.
மேலும் ரூ.1,000 மதிப்புள்ள நோட்டுப்புத்தகங்கள், பென்சில், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டு பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாராட்டு
இதற்காக ஆசிரியர்கள் தங்களுடைய ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி உள்ளனர். இது இந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அரசு பள்ளிகளில் வழங்குகிறோம். இருப்பினும் தனியார் பள்ளிகளின் மீது நாட்டம் அதிகமாக உள்ளது. எனவே அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க இவ்வாறு உதவித்தொகை வழங்குகிறோம். இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது' என்றனர்.