ஈரோடு மாநகரின் மத்தியில் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் அரசு தொடக்கப்பள்ளி- மாற்று இடம் வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை
ஈரோடு மாநகரின் மத்தியில் கடும் இட நெரிசலில் அரசு பள்ளிக்கூடம் ஒன்று சிக்கித்திணறி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்துக்கு மாற்று இடம் வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு மாநகரின் மத்தியில் கடும் இட நெரிசலில் அரசு பள்ளிக்கூடம் ஒன்று சிக்கித்திணறி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்துக்கு மாற்று இடம் வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நூற்றாண்டு கண்ட பள்ளி
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட இடையன்காட்டு வலசு பகுதி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே உள்ளது. ஈரோட்டில் இருந்து நசியனூர் செல்லும் ரோட்டைஒட்டி அமைந்திருக்கிறது ஈரோடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளிக்கூட வளாகத்தில் ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கூடம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
1917-ம் ஆண்டு இந்த பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இங்கு பணி செய்த ஊழியர்களுக்கு தந்தை பெரியார் ஊதியம் வழங்கிய பதிவுகள் உள்ளன. ஈரோடு மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கும் முன்னோடியாக நூற்றாண்டு கண்ட இடையன்காட்டு வலசு பள்ளிக்கூடம் இப்போது கடும் இட நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.
தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போதே இடநெருக்கடி ஏற்பட்டது. அது உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தபோது இடப்பற்றாக்குறை இன்னும் அதிகமாகி விட்டது.
வசதிகள் இல்லை
அதுமட்டுமின்றி, பள்ளிக்கூடம் உயர்நிலை பள்ளிக்கூடமாக மாறியதால், தொடக்கப்பள்ளி தனி நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆனால், ஒரே வளாகத்துக்குள் 2 பள்ளிக்கூடங்கள் இயங்கும் நிலையால் போதிய கழிப்பிட வசதிகள் கூட இல்லாமல் குழந்தைகள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.
தொடக்கப்பள்ளிக்கூடத்தில் 1- முதல் 5-ம் வகுப்புவரை 300 மாணவ-மாணவிகளும், உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை 660 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 960 பேர் படிக்கிறார்கள். இவர்களுக்கு மொத்தமாக 10 கழிப்பிடங்கள் கூட இல்லை என்பது வருத்தத்துக்கு உரியது. அதுமட்டுமின்றி வகுப்பறை பற்றாக்குறையால் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஒரே வகுப்பறையில் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உட்கார வேண்டிய சூழல் இருப்பதுடன், ஒரே வகுப்பில் 2 ஆசிரியைகள் அமர்ந்து பாடம் எடுக்க வேண்டிய அவலமும் உள்ளது. இது பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இடையன்காட்டு வலசு மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கூடத்துக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் அறிவித்து உள்ளனர்.
ஈ.சி.லோகநாதன்
இதுகுறித்து பள்ளிக்கூடத்தின் பெற்றோர் -ஆசிரியர் கழக தலைவர் ஈ.சி. லோகநாதன் கூறியதாவது:-
ஈரோடு மாநகரில் நூற்றாண்டு கண்ட ஒரு சில பள்ளிக்கூடங்களில் இதுவும் ஒன்றாகும். நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த பள்ளிக்கூடத்தில், கற்பித்தல் மிகவும் சிறப்பாக உள்ளது. அரசு பள்ளிக்கூடங்கள் என்றால் மாணவ-மாணவிகளை பெற்றோர் சேர்க்க அச்சப்படும் சூழலில், இடையன்காட்டு வலசு பள்ளிக்கூடத்தை பெற்றோர்கள் தேடி வந்து சேர்க்கிறார்கள். அதற்கு காரணம், எளிமையான முறையில் அனைத்து தரப்பு குழந்தைகளுக்கும் தரமான கல்வியை இந்த பள்ளிக்கூடம் வழங்குகிறது. இதனால் இங்கு மாணவர் சேர்க்கையும் அதிகரித்து வந்தது. இந்த பள்ளிக்கூடத்தின் மொத்த பரப்பளவு 6 ஆயிரத்து 400 சதுர அடிதான். இந்த இடத்தில் சுமார் 1000 மாணவ-மாணவிகள், ஆசிரிய -ஆசிரியைகள் தினமும் வந்து செல்வது எத்தனை சிரமம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். நெருக்கடியான இடத்தில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களால் சில வகுப்பறைகளுக்குள் காற்று புகவும், வெளிச்சம் கிடைக்கவுமே மிகவும் சிரமமாக இருக்கிறது. மின்சாரம் இல்லை என்றால் வகுப்பறைகள் இருட்டில் மூழ்கிவிடும். எனவே இந்த பள்ளிக்கூடத்தை சற்று தொலைவில் உள்ள சம்பத்நகர் உழவர் சந்தை அருகே காலியாக உள்ள இடத்துக்கு மாற்றித்தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பி இருக்கிறோம்.
சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்தோம். அந்த மனுவுக்கான பதில் வந்து உள்ளது. அதில் முதன்மை கல்வி அதிகாரிக்கு விவரம் கேட்டு அனுப்பி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். எனவே அதிகாரிகள் பள்ளிக்கூடத்துக்கு நேரடியாக வந்து உண்மை நிலையை எடுத்துக்கூறி, மாணவ-மாணவிகள், ஏழை பெற்றோர்கள் நலன் கருதி மாற்று இடத்தில் பள்ளிக்கூடத்தை கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.ரேணுகா
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஆர்.ரேணுகா கூறியதாவது:-
இடையன்காட்டு வலசு அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரிய-ஆசிரியைகள் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். ஆனால், இங்கு இடப்பற்றாக்குறை இருப்பதால் குழந்தைகள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஒரே வகுப்பில் குழந்தைகளை அடைத்து வைப்பதுபோன்று தோன்றுகிறது. ஆசிரியர்களால் சரியாக பாடம் எடுக்க முடிவதில்லை. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை உடற்கல்வி வகுப்பு எடுக்க வேண்டும். இங்கு விளையாட்டு மைதானம் இல்லை. எங்கே போய் விளையாடுவது. இந்தநிலையில் உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளியாக தகுதி உயர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்து உள்ளன. அப்படி தகுதி உயர்த்தப்பட்டால், எங்கே வகுப்பறைகள் கட்டப்படும். ஆய்வக வசதிக்கு எங்கே செய்வார்கள். கூடுதல் கழிவறைகள் கட்ட இடம் உள்ளதா?. கழிவறை வசதி இல்லாததால் பெண் குழந்தைகள் எத்தனை சிரமப்படுவார்கள் என்பது பெற்றோர்களுக்குத்தான் தெரியும்.
சம்பத்நகர் உழவர் சந்தைபகுதியில் காலி இடம் இருக்கிறது. அங்கே இந்த தொடக்கப்பள்ளிக்கூடத்தை மாற்றினால் இங்கு இட நெருக்கடி குறையும். இதை கண்டிப்பாக அரசு ஏற்று, எங்களுக்கு நிறைவேற்றித்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்.முத்துக்குமார்
பெற்றோர் தரப்பில் என்.முத்துக்குமார் கூறியதாவது:-
மாணவ-மாணவிகள் பாடப்புத்தகம் படிப்பதுடன், உலக அறிவும் பெற வேண்டும் என்றால் நூலகம் அவசியம். ஆனால், இந்த பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகள் உட்காரவே இடம் இல்லாத நிலையில் எங்கே நூலகம் அமைப்பது. மிகப்பெரிய அளவில் மைதானம் இல்லை என்றாலும், வகுப்பறைகளுக்கு வெளிச்சம் வரவும், நல்ல காற்றோட்டமான வகுப்பறைகள் கட்டவும், இடைவேளையின் போது குழந்தைகள் காலாற நடந்து வரவும் தேவையான இடவசதி வேண்டும் அல்லவா... அது இங்கே இல்லை. ஒரே நேரத்தில் 1000 மாணவ-மாணவிகள் நிற்பதற்கு போதிய இடம் கூட இங்கு இல்லை. தொடக்கப்பள்ளிக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் அரசு கண்டுகொள்ள மறுப்பது ஏன்? என்று தெரியவில்லை. இதுபோல் தினசரி காலை, மாலை வேளையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
என்.கலைஞானம்
பெற்றோர் தரப்பில் என்.கலைஞானம் கூறியதாவது:-
எனது மகன் தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான். அங்கு தொடர்ச்சியாக பாடங்களில் தோல்வி அடைந்ததால் பள்ளிக்கூடம் என்றாலே வெறுப்பாக இருந்தான். அவனது கல்வியை நினைத்து பெற்றோராகிய எங்களுக்கும் மிகுந்த வருத்தமாக இருந்தது. ஒரு கட்டத்தில் இடையன்காட்டுவலசு மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் சேர்த்தேன். அரசு பள்ளிக்கூடத்தில் மகனை சேர்க்கிறோமே என்று சற்று வருத்தமாக இருந்தது. ஆனால் பள்ளியில் சேர்ந்த ஒரிரு நாளிலேயே உற்சாகமாக பள்ளிக்கூடத்துக்கு வரத்தொடங்கினான். எனக்கும் எந்த செலவும் இல்லை. கடந்த தேர்வில் 300 -க்கு 297 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறான். இத்தனைக்கும் தனியார் பள்ளியில் படித்தபோது அவன் மீது நாங்கள் காட்டிய அக்கறையை கூட இப்போது காட்டுவதில்லை. அவனாக படிக்கிறான். அப்படிப்பட்ட சிறந்த சூழலை இந்த பள்ளி உருவாக்கி இருக்கிறது. ஆனால், இங்கு உள்ள இடநெருக்கடி வருத்தமாக இருக்கிறது.
சில நேரம் கழிவறைக்கு செல்ல முடியாத சூழலில் வீட்டுக்கு வரும் வரை இயற்கை உபாதைகளை அடங்கி வைத்துக்கொள்கிறான். இதுபோன்று நிறைய மாணவ-மாணவிகள் இருக்கிறார்கள். இதனால் மிகப்பெரிய உடல் பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைகளின் எதிர்காலம் கருதி மாற்று இடம் தேவை என்ற கோரிக்கை உள்ளது. இதுதொடர்பாக பெற்றோர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறோம். ஆனால், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் எங்களை தொடர்ந்து சமாதானப்படுத்தி வருகிறார். எங்கள் கோரிக்கை குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை ஆசிரியர் எஸ்.தமிழ்செழியன்
இதுபற்றி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் எஸ்.தமிழ்செழியன் கூறியதாவது:-
நான் இந்த பள்ளிக்கூடத்தில் பொறுப்பு ஏற்கும்போதே 300 மாணவ-மாணவிகள் படித்தார்கள். உயர்நிலை பள்ளிக்கூடத்திலும் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர். கொரோனாவின் போது கூடுதலாக 100 மாணவ-மாணவிகள் இங்கு சேர்ந்தனர். பின்னர் பள்ளிக்கூடம் திறந்தபோது, போதிய இடவசதி இல்லை. குழந்தைகளை தரையில் உட்கார வைக்க முடியாது. எனவே பெற்றோர்கள் விருப்பமின்றி மாற்று சான்றிதழ்கள் வாங்கிச்சென்றனர். நான் வரும்போது தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் இருந்தோம். இப்போது கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டு கூடுதலாக 2 ஆசிரியர்கள் பெற்று இருக்கிறோம். ஆனால், இடவசதி இல்லாமல் என்ன செய்வது.
ஏற்கனவே நான் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி இருக்கிறேன். வட்டார கல்வி அதிகாரி இதுபற்றி ஆய்வும்செய்து இருக்கிறார். ஆசிரியர்களாகிய நாங்கள், முழுமையாக குழந்தைகளுக்கு கல்வியை அளிக்கிறோம். ஆனால், அடிப்படை வசதிகளை செய்ய போதிய வசதி இல்லாதது பாதிப்பாகவே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் உட்காரவே நெருக்கடி இருந்தாலும், செருப்புகளை அடுக்கி வைப்பது, புத்தக பைகளை வரிசையாக வைப்பதில் ஒழுக்கமாக இருக்கிறார்கள். தற்போது நன்கொடையாளர்கள் மூலம் செருப்புகளை வைக்கும் ஸ்டேண்டுகள் அமைக்கவும் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
எண்ணும், எழுத்தும் திட்டத்தில் குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்க அதிக இடவசதி வேண்டும். ஆனால் இங்கு மிகுந்த சிரமத்தில்தான் பாடம் எடுக்கிறோம் என்று ஆசிரியைகளும் வருத்தத்துடன் தங்கள் கருத்தினை பகிர்ந்து கொண்டனர்.
இடையன்காட்டு வலசு மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கூடம் மாற்று இடத்துக்கு கொண்டு செல்லப்படுவதே இந்த பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.