பிளஸ்-2 தேர்வுக்காக உற்சாகமாக சென்ற மாணவ-மாணவிகள்: ஈரோடு மாவட்டத்தில் 22 ஆயிரத்து 604 பேர் எழுதினார்கள்- 2,290 பேர் எழுதவில்லை


ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத மாணவ -மாணவிகள் உற்சாகமாக சென்றனர். மாவட்டத்தில் 22 ஆயிரத்து 604 பேர் தேர்வு எழுதினார்கள், 2 ஆயிரத்து 290 பேர் எழுதவில்லை.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத மாணவ -மாணவிகள் உற்சாகமாக சென்றனர். மாவட்டத்தில் 22 ஆயிரத்து 604 பேர் தேர்வு எழுதினார்கள், 2 ஆயிரத்து 290 பேர் எழுதவில்லை.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ -மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதையொட்டி மாணவ -மாணவிகள் நேற்று காலை உற்சாகமாக தேர்வு மையங்களுக்கு சென்றனர். முன்னதாக அவர்கள் தங்களது பெற்றோரிடம் ஆசி பெற்று கொண்டு பள்ளிக்கூடங்களுக்கு புறப்பட்டனர்.

அப்போது பெற்றோர்கள் பூஜை செய்து நெற்றியில் திருநீறு வைத்து வாழ்த்தினார்கள். வழக்கமாக பஸ்களில் செல்லும் பல மாணவ -மாணவிகளை பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களில் தேர்வு மையங்களுக்கு அழைத்து சென்றனர்.

கலெக்டர் ஆய்வு

மேலும் தேர்வு மையங்களிலும் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், மாணவ -மாணவிகளை வாழ்த்தி தேர்வு எழுத உற்சாக மூட்டினர். காய்ச்சல் பாதிப்பை தடுக்கும் வகையில் பெரும்பாலான மாணவ -மாணவிகள் முக கவசங்கள் அணிந்து தேர்வு எழுத வந்திருந்தனர்.

ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கூட மையத்தை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகள் இன்று (அதாவது நேற்று) தொடங்கி வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 200 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 24 ஆயிரத்து 894 பேர் எழுதுகிறார்கள்.

கண்பார்வை குறைபாடு

பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு 3 தனித்தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 26 வழித்தடங்கள் மூலம் 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார்கள் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகிறது. தேர்வு பணிக்காக 105 முதன்மை கண்காணிப்பாளர்கள், 110 துறை அலுவலர்கள், 1,447 அறை கண்காணிப்பாளர்கள், 150 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் சொல்வதை எழுதுபவர் மற்றும் கூடுதல் நேரம் ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் 3 கண்பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள் உள்பட 412 மாணவ -மாணவிகளுக்கு வழங்கப்பட்டு அவர்களும் சிறப்பாக தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

இந்த ஆய்வின்போது அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் உள்பட பலர் இருந்தனர்.

2,290 பேர் எழுதவில்லை

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பிளஸ்-2 தமிழ் பாடத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 24 ஆயிரத்து 894 மாணவ -மாணவிகள் எழுத வேண்டும்.

ஆனால் நேற்று 2 ஆயிரத்து 290 மாணவ -மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. இதனால் 22 ஆயிரத்து 604 பேர் மட்டுமே தமிழ் பாடத்தேர்வை எழுதினார்கள். தேர்வு எழுத அதிகமான மாணவ -மாணவிகள் வராதது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story