பள்ளி- கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்
விழுப்புரத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
மாரத்தான் போட்டி
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி (மாரத்தான்) நடைபெற்றது.
இப்போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசியதாவது:-
அறிவுரை
தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்மொழி மற்றும் தமிழ் மக்களின் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்ட அண்ணா போன்ற தலைவர்கள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்வதற்கும், உடற்திறனை மேம்படுத்துவதற்காகவும் நடத்தப்படும். இதுபோன்ற விளையாட்டுப்போட்டிகளில் பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். வெற்றி பெறுவது என்பது அடுத்தகட்டம். ஆனால் போட்டிகளில் கலந்துகொண்டால் உள்ளம் மற்றும் உடல்நலம் பேணி பாதுகாக்கப்படும் என்றார்.
இப்போட்டியானது 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும், 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டது.
சிறுவர், சிறுமிகள்
சிறுவர், சிறுமிகளுக்கான மாரத்தான் போட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கி இ.எஸ்.கார்டன், எல்லீஸ்சத்திரம் சாலை, புதிய பஸ் நிலையம் வழியாக வந்து மீண்டும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நிறைவடைந்தது. அதேபோல் இளைஞர்கள், இளம்பெண்களுக்கான மாரத்தான் போட்டி, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கி நான்குமுனை சந்திப்பு, மாம்பழப்பட்டு சாலை, இ.எஸ்.கார்டன் வழியாக வந்து கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் முடிவடைந்தது.
பரிசு
பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்கள் வரை வந்தவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் சி.பழனி, நா.புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஹரிதாஸ், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், நகராட்சி ஆணையர் ரமேஷ், தடகள பயிற்சியாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.