பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம்
திருக்கோவிலூர் அருகே பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி பஸ் ஒன்று நேற்று காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூரில் இருந்து டி. குன்னத்தூர் நோக்கி புறப்பட்டது. கடலூா்-திருக்கோவிலூர் சாலையில் குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது வேகத்தடையை கவனிக்கால் பஸ்சை டிரைவர் வேகமாக இயக்கியதாக தெரிகிறது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஆவி கொளப்பாக்கம் கிராமத்தை் சேர்ந்த சரவணன் மகள் ஆஷிகா (வயது 10) அன்புராஜ் மகள் சுமித்ரா (8), சங்கமித்ரன் (6), ஸ்ரீ கண்ணன் மகன் மொழியரசன்(11), பூமிகா (15), சந்தப்பேட்டையை சேர்ந்த பஸ் டிரைவரான அமீர்கான் (65) மற்றும் கிளீனர் சங்கருக்கும் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.