பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வீடு திரும்புவார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.
சென்னை,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில், அவருக்கு எச்1 என்1 வகை இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால், ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை வீடு திரும்புவார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அவர், செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.