பள்ளி மாணவி பதாகை ஏந்தி போராட்டம்


பள்ளி மாணவி பதாகை ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2023 12:30 AM IST (Updated: 29 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி தந்தைக்கு பணி மாறுதல் கோரி பள்ளி மாணவி பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி

மாற்றுத்திறனாளி தந்தைக்கு பணி மாறுதல் கோரி பள்ளி மாணவி பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். உலிக்கல் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி மகாலட்சுமி தனது தந்தைக்கு பணி மாறுதல் வழங்கக்கோரி பெற்றோருடன் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எனது தந்தை காது கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளி. அவர் வீட்டில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பிக்கட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக உள்ளார். எனது தாய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.உலிக்கல் பேரூராட்சியில் பாட்டி சுப்பம்மாள் தூய்மை பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டார். அப்போது அவருக்கு பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கிய வீட்டில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்தேன்.

இந்தநிலையில் தந்தை பிக்கட்டியில் வேலை செய்வதால் உலிக்கல்லில் உள்ள வீட்டை காலி செய்யுமாறு உலிக்கல் பேரூராட்சி தலைவர் தெரிவித்ததால், வீட்டை காலி செய்து விட்டோம். இதானல் நாங்கள் வீடு இல்லாமல் கடந்த 4 மாதங்களாக உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறோம். இதனால் நான் தொடர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது.

பணி மாறுதல்

உலிக்கல் பேரூராட்சியில் தூய்மை பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, தந்தைக்கு உலிக்கல் பேரூராட்சிக்கு பணி மாறுதல் வழங்கினால், எனது பாட்டியுடன் நாங்கள் ஏற்கனவே தங்கி இருந்த வீட்டில் வசித்து கல்வியை தொடர உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

121 மனுக்கள்

நீலகிரி மாவட்ட உடற்பயிற்சி கூட சங்க நிர்வாக செயலாளர் சிவகுமார் மற்றும் உரிமையாளர்கள் கொடுத்த மனுவில், கூடலூர் நகரில் தனியார் உடற்பயிற்சி கூடத்தை அருகில் மற்றொரு கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அங்கு 3-வது தளம் அமைக்க அனுமதி இல்லை என்று கூறி ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் பணிகள் நிறுத்தப்பட்டது. விதிமுறைகளை காரணம் காட்டி சிலருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, பாரபட்சம் இன்றி அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 121 மனுக்கள் பெறப்பட்டன.


Next Story