பள்ளி மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்


பள்ளி மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:45 AM IST (Updated: 14 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தாயை பழிவாங்குவதற்காக பள்ளி மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதுடன், தப்பிச்சென்ற கட்டிட தொழிலாளியை போலீசார் மடக்கி பிடித்தனர்.

கோயம்புத்தூர்

பீளமேடு, அக்.14-

கோவையில் தாயை பழிவாங்குவதற்காக பள்ளி மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதுடன், தப்பிச்சென்ற கட்டிட தொழிலாளியை போலீசார் மடக்கி பிடித்தனர்.

கோவை பீளமேடு பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கட்டிட தொழிலாளி

கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 52), கட்டிட தொழிலாளி. இவர் பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை செய்து வரும் 43 வயதான பெண்ணுடன் ராமசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 11 வயதில் 6-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். அந்த பெண்ணின் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

ராமசாமியிடம் பழகிய அந்த பெண் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் திடீரென்று ராமசாமியிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவரிடம் வாங்கிய பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் ராமசாமி அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவர் பேசுவதை தவிர்த்து இணைப்பை துண்டித்து விட்டு உள்ளார்.

பழிவாங்க திட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி, அந்த பெண்ணை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக அந்த பெண்ணின் மகளை கடத்திச்செல்ல திட்டமிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் காலையில், அந்த பெண்ணின் மகள் படித்து வரும் பள்ளிக்கு ராமசாமி சென்றார். பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து, அந்த மாணவியை தான் அழைத்துச்செல்ல அனுமதி கேட்டார்.

அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர், நீங்கள் யார் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் அந்த மாணவியின் உறவினர் என்று தெரிவித்தார். உடனே தலைமை ஆசிரியர், உறவினர்களுடன் மாணவியை விட முடியாது, பெற்றோரை அழைத்து வாருங்கள் அப்போதுதான் அனுப்பி வைப்போம் என்று கூறி உள்ளார். இதனால் அவர் பள்ளியை விட்டு வெளியே வந்தார்.

மாணவியை கடத்தினார்

பின்னர் மாலை 4 மணியளவில் பள்ளி அருகே சென்றார். அப்போது அந்த பெண்ணின் மகள் பள்ளி முடிந்ததும் வெளியே வந்தார். உடனே அவர் அந்த மாணவியிடம் சென்று என்னுடன் வா என்று கூறினார். ராமசாமி தனது வீட்டின் அருகே இருப்பதால் தனக்கு தெரிந்தவர்தானே என்று நினைத்து அவருடன் மாணவி சென்றார்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் வேலைசெய்து வரும் நிறுவனத்தின் உரிமையாளரின் செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில் தான் முருகன் பேசுவதாகவும், உங்கள் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியரின் மகளை நான் கடத்தி வைத்து உள்ளதாகவும், ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு அந்த குழந்தையை அழைத்துச்செல்லுங்கள் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

உடனே அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தனக்கு வந்த செல்போனின் எண்ணை அந்த மாணவியின் தந்தையிடம் கொடுத்தார். உடனே அவர் தனது மனைவியுடன் சேர்ந்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர், தான் முருகன் பேசுவதாகவும், உங்கள் மகளை ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அந்த குழந்தையை நான் என்ன செய்வேன் என்பதே தெரியாது என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

செல்போனில் மறுமுனையில் பேசிய நபரின் குரலை கேட்ட அந்த பெண், இது ராமசாமியின் குரல்தான் என்பதை உறுதி செய்ததுடன், இது குறித்து இரவு 8 மணியளவில் பீளமேடு போலீசில் புகார் செய்தார். அத்துடன் ராமசாமி பேசிய செல்போன் எண்ணையும் போலீசாரிடம் கொடுத்தார்.

தப்பிச்சென்றார்

உடனே போலீசார் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். மறுமுனையில் பேசிய ராமசாமியிடம் குழந்தையை ஒப்படைத்து விடு இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் கூறினார்கள். இதை கேட்டு பயந்துபோன, அவர் இரவு 10 மணியளவில் பீளமேடு போலீஸ் நிலையம் அருகே அந்த மாணவியை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

அங்கிருந்து போலீஸ் நிலையம் சென்ற அந்த மாணவியை போலீசார் மீட்டதுடன், விவரம் கேட்டறிந்தனர். அவர் கூறிய விவரத்தை வைத்து, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பாப்பம்பட்டி பிரிவு அருகே அவர் இருசக்கர வாகனத்தில் செல்வது பதிவாகி இருந்தது.

மடக்கி பிடித்தனர்

உடனே போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த ராமசாமி வேகத்தில் சென்று தப்பிக்க முயற்சி செய்தார். அதற்குள் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பீளமேடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அந்த மாணவியின் தாய் தன்னுடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்ப்பதால் அவரை பழிவாங்க அந்த மாணவியை கடத்திச்சென்றதாக கூறினார். இதையடுத்து போலீசார் ராமசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story