பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தாயின் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தாயின் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பாலியல் தொல்லை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த பெண், பாலகிருஷ்ணன்(வயது 43) என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். அந்த பெண்ணுக்கு, 13 வயதில் மகள் உள்ளார். அவர், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதற்கிடையில் அந்த பெண்ணுக்கும், பாலகிருஷ்ணனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர். அப்போது, அந்த பெண்ணின் மகளுக்கும், பாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
போக்சோவில் கைது
இந்த நிலையில் அந்த சிறுமி படிக்கும் பள்ளியில் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் அவர், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஆசிரியர்களிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், குழந்தைகள் உதவி எண் 1098-க்கு போன் செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் குறித்து தெரிவித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் சிறுமியின் தாயார் மற்றும் பாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலகிருஷ்ணன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.