பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்


பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்
x
தினத்தந்தி 5 Sep 2023 11:00 PM GMT (Updated: 5 Sep 2023 11:00 PM GMT)

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் நின்ற படி ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் நின்ற படி ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பள்ளி மாணவர்கள்

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக கூடலூர், பந்தலூர் பஜாருக்கு வந்து செல்கின்றனர்.

இதேபோல் போக்குவரத்து வசதி இல்லாத சூழலில் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அதற்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் பஸ்கள் இயக்கப்படாத பெரும்பாலான கிராமங்களில் உள்ள மாணவர்கள், சில கி.மீ. தூரம் நடந்து வந்து பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்காக பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

கூடுதல் பஸ்கள்

ஆனால், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப காலை, மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் அரசு பஸ்களில் மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் உரிய நேரத்தில் பள்ளிக்கூடம் மற்றும் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்க குறைவாக இயக்கப்படும் அரசு பஸ்களின் படிக்கட்டுகளில் நின்று ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். புத்தக பையுடன் படிக்கட்டில் தொங்கிய படி பயணிப்பதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மாணவர்கள் நெருக்கி அடித்தபடி பஸ்களில் நிற்கின்றன. இதனால் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, போக்குவரத்து வசதி கூடலூர் பகுதியில் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. காலை, மாலை நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள ஓவேலி, பந்தலூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story