பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்
பாளையங்கோட்டை அருகே பள்ளி மாணவர்கள் திடீர் மோதிக் கொண்டனர்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கீழப்பாட்டம், கீழநத்தம், வடக்கூர், தெற்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இருதரப்பை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதுதொடர்பாக ஒரு மாணவரின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் போலீசார் ஒரு தரப்பினருக்கு சாதகமாக நடவடிக்கை எடுத்ததாக மற்றொரு தரப்பினர் குற்றம்சாட்டினர். அவர்கள் நேற்று ஒரு கிராமத்தில் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட மாணவர்களை வழக்கில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.