டைனோசர் முட்டையை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்


டைனோசர் முட்டையை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
x

வாரணவாசி அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டையை பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

அரியலூர்

டைனோசர் முட்டை

அரியலூர் கனிம சுரங்கங்களில் சுமார் 6.5 முதல் 7.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் அதிகமாக கிடைத்து வருகிறது. 1980-85 காலக்கட்டங்களில் தமிழ்நாடு சிமெண்டு நிறுவனத்தின் திறந்தவெளி சுரங்கத்தில் ஒரு முட்டை வடிவிலான கன்கர் எனும் பாறை கிடைத்தது. 1996-ல் அந்த முட்டையை ஜெர்மனி மற்றும் நம் நாட்டை சேர்ந்த சில தொல்லுயிர் ஆய்வாளர்கள் ஆராய்ந்த போது, அது டைட்டனோசர்ரஸ் என்ற ஒருவகை தாவர உன்னி டைனோசரின் முட்டை என தெரியவந்தது.

6½ கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைட்டனோசரஸ் வகை டைனோசர் ஒரு ஆற்றின் ஓரமாக அதன் கூட்டில் இட்ட முட்டை காலப்போக்கில் தண்ணீரில் அடித்துக் கொண்டு கடலினடியில் உள்ள படிமணலில் புதைந்து காலப்போக்கில் படிவமாகி இன்று நமக்கு சிதையாமல் கிடைத்திருக்கிறது. இந்தியாவிலேயே கடலடியில் உருவான பாறைகளில் கிடைத்த ஒரே டைனோசர் முட்டை இதுவே என்ற பெருமையும் இதற்கு உண்டு.

பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்

இந்த நிலையில் அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் கடந்த 29-ந்தேதி நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு சிமெண்டு கார்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குனர் பாசில் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்காக பழமையான டைனோசர் முட்டையினை வழங்கினார். இந்த பழமையான டைனோசர் முட்டை தற்போது வாரணவாசி அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த டைனோசர் முட்டையினை அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பார்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வாரணவாசி அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டையினை நேற்று தஞ்சாவூரை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதியுடன் பார்வையிட்டனர். மேலும் அவர்களுக்கு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவக்குமார் உயிரினங்களின் பரினாம வளர்ச்சிகள் குறித்தும், டைனோசர் முட்டை குறித்தும் விரிவாக எடுத்து கூறினார்.


Next Story