வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லப்படும் பள்ளி மாணவர்கள்
பள்ளிப்பருவம் என்பது கொண்டாடப்படவேண்டிய பருவம். ஆனால் துள்ளிக்குதித்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பல அசவுகரியங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
இருக்கை மாற்றங்கள்
அளவுக்கு மீறிய புத்தக சுமை, பள்ளிக்கு வாகனங்களில் செல்லும் போது சந்திக்கும் அவஸ்தைகள் ஏராளம். பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் பல விதங்களில் செல்கிறார்கள். கிராமப்புறங்களை பொறுத்தவரை பஸ் வசதி, வாகன வசதிகள் இல்லாத பல இடங்களில் நடைபயணமாக செல்லும் குழந்தைகளை பார்க்க முடியும். அதுவே நகரங்களில் தொலைதூரங்களில் உள்ள பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி வாகனங்கள், தனியார் வேன், கார்கள், ஆட்டோக்களில் செல்கிறார்கள். இவ்வாறு செல்வதில் தான் ஏகப்பட்ட பிரச்சினைகள்.
குறிப்பாக தனியார் வேன்கள், கார்கள், ஆட்டோக்களில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்கிறார்கள். 5 குழந்தைகள் ஏற்றிச் செல்லக்கூடிய ஆட்டோவில் 10 முதல் 12 குழந்தைகள் வரை கூட ஏற்றப்படுகின்றனர். இதற்காகவே ஆட்டோவில் சில இருக்கை மாற்றங்களை கூட செய்து கொள்கின்றனர். பல மாணவ-மாணவிகள் இருக்கை போதாமல் டிரைவர் அருகில் இருபுறமும் தொற்றிக்கொண்டு செல்வதும் நிறைய இடங்களில் அரங்கேறுகிறது.
சிறைப்பறவைகள் போல்...
அதேபோல் வேன்களிலும், வாடகை கார்களிலும் ஒதுக்கீட்டுக்கு அதிகமாக ஏற்றிச்செல்லப்படுவதுண்டு. சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 மாணவர்களை மட்டுமே ஏற்றி வரவேண்டிய ஒரு வேனில் பள்ளி மாணவர்கள் 41 பேர் இருந்தனர். இதேபோல் 8 மாணவர்களை ஏற்றி வரவேண்டிய ஒரு டெம்போவில் 23 மாணவர்களை ஏற்றி கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இன்னும் சில ஆட்டோக்களில் பின்புறம் சரக்கு ஏற்றக்கூடிய இடத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளை பின்புறமாக அமரவைத்து கூண்டு கதவால் அடைத்து சிறைப்பறவைகள்போல் கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.
அதுமட்டுமின்றி பெரும்பாலான ஆட்டோக்கள், தனியார் வேன்கள் பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச்செல்லும் போது வேகமாக செல்வதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. அவ்வாறு செல்லும் போது விபத்துகளில் சிக்கிவிட்டால் குழந்தைகளின் நிலைமை மிகவும் பரிதாபமாகிவிடக்கூடும். சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பள்ளி மாணவிகள் 8 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு ஆட்டோ மீது பஸ் மோதியதில் அனைவருமே பலத்த காயம் அடைந்தனர். இதுபோன்ற பிரச்சினைகளை போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி சரியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பும், சவுகரியமான பயணமும் கிடைக்கும். இதுகுறித்து பெற்றோர், ஆசிரியர் மற்றும் போக்குவரத்து போலீசார் கூறிய கருத்துகளை பார்ப்போம்.
ஆபத்தான பயணம்
பெரம்பலூர் அருகே நெடுவாசலை சேர்ந்த விவசாயி தங்கவேல்:- எங்கள் குழந்தைகளை டிரைவர்களை நம்பி தான் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் அனுப்பி வைக்கிறோம். எனவே டிரைவர்கள் தங்களது குழந்தைகளை போல் எண்ணி கவனத்துடன் அவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று வர வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் வாகனங்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் அவர்கள் ஏறி விட்டார்களா? இறங்கி விட்டார்களா? என்பதை ஒருமுறைக்கு இருமுறைக்கு பார்க்க வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகளை ஆட்டோக்களில் அதிகளவு ஏற்றி செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு தான் ஏற்றி செல்ல வேண்டும். பள்ளி வாகனத்தை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும். அரசு பஸ்களிலும் பள்ளி மாணவ-மாணவிகள் படியில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். எனவே பள்ளி வேலை நாட்களில் காலை, மாலை நேரத்தில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும். நெடுவாசல் கிராமத்தில் பள்ளி நேரத்திற்கு முன்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் காலை நேர உணவை தவிர்த்து பஸ் பிடிப்பதற்காக சென்று விடுகிறார்கள். எனவே இப்பகுதியில் பள்ளி நேரத்தில் பஸ் இயக்க வேண்டும். அல்லது கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்
துங்கபுரத்தை சேர்ந்த ரவீசுவரமூர்த்தி:- பள்ளி நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு வரும்பொழுது பஸ்சில் தொங்கியவாறு பயணம் செய்ய வேண்டிய அவலம் ஏற்படுகிறது. எனவே பள்ளி நேரத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தனியார் பள்ளி வாகனம்போல் ஒரு குறிப்பிட்ட வழி தடத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் அழைத்துக் கொண்டு அந்தந்த பள்ளியில் விடலாம். மாலையில் பள்ளியில் இருந்து அந்த பஸ் கிளம்பி குறிப்பிட்ட வழிதடத்தில் அனைத்து மாணவர்களையும் இறக்கிவிட்டு மீண்டும் அது பழைய ரூட்டில் பயணம் செய்யலாம். இவ்வாறு செய்தால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்வது எளிதாக இருக்கும்.
மன உளைச்சல்
வயலப்பாடியை சேர்ந்த இல்லத்தரசி முத்துலட்சுமி:- பள்ளி மாணவர்களின் பஸ் பயணம் பெரும்பாலும் படிக்கட்டு பயணமாகவே உள்ளது. உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்ற சூழலில் மாணவர்கள் கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் பயணிக்க வேண்டி உள்ளது. உரிய நேரத்தில் செல்ல முடியுமா? என்ற மன உளைச்சல் உண்டாகிறது. இதனால் படிப்பில் ஆர்வம் குறையவும் வாய்ப்புள்ளது. பெண் பிள்ளைகள் நிறைய பிரச்சினைக்கு உள்ளாகின்றனர். இந்த பஸ்சில் ஏறினால் தான் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் மாணவர்கள் படியில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. பெற்றோரும் தனது பிள்ளை பாதுகாப்பாக பள்ளி சென்று விட்டார்களா? என்ற மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மாணவர்கள் வேறு வழி இல்லாமல் வழிப்போக்கில் செல்கின்ற வாகனங்களையே நாடுகின்றனர். மாணவர்களுக்கான தனி பஸ் வசதி உரிய நேரத்தில் வேண்டும். இதுவே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு ஆகும்.
வேக கட்டுப்பாட்டு கருவி
போக்குவரத்து போலீசார்:- பள்ளி குழந்தைகளின் உயிர் விலைமதிக்க முடியாதது. எனவே டிரைவர்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும், கடமையுணர்வோடும் பணியாற்ற வேண்டும். வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே மாணவ-மாணவிகளை ஏற்றி செல்ல வேண்டும். டிரைவர்களுக்கு தனி கிரில் அமைத்து பள்ளி குழந்தைகள் அவர் அருகில் செல்ல முடியாத அளவில் இருக்க வேண்டும். பயணத்தின் போது கட்டாயம் உதவியாளர் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைபேசி எண் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தொலைபேசி எண், போலீஸ் நிலைய தொலைபேசி எண், 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண் கட்டாயம் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் படிக்கட்டுகள் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். அவசர கால கதவு நல்ல நிலையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்திருக்க வேண்டும். வாகனத்தின் முன்பும், பின்பும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஆட்டோக்களில் அதிகளவு பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லக்கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.