வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லப்படும் பள்ளி மாணவர்கள்


வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லப்படும் பள்ளி மாணவர்கள்
x

பள்ளிப்பருவம் என்பது கொண்டாடப்படவேண்டிய பருவம். ஆனால் துள்ளிக்குதித்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பல அசவுகரியங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

அரியலூர்

இருக்கை மாற்றங்கள்

அளவுக்கு மீறிய புத்தக சுமை, பள்ளிக்கு வாகனங்களில் செல்லும் போது சந்திக்கும் அவஸ்தைகள் ஏராளம். பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் பல விதங்களில் செல்கிறார்கள். கிராமப்புறங்களை பொறுத்தவரை பஸ் வசதி, வாகன வசதிகள் இல்லாத பல இடங்களில் நடைபயணமாக செல்லும் குழந்தைகளை பார்க்க முடியும். அதுவே நகரங்களில் தொலைதூரங்களில் உள்ள பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி வாகனங்கள், தனியார் வேன், கார்கள், ஆட்டோக்களில் செல்கிறார்கள். இவ்வாறு செல்வதில் தான் ஏகப்பட்ட பிரச்சினைகள்.

குறிப்பாக தனியார் வேன்கள், கார்கள், ஆட்டோக்களில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்கிறார்கள். 5 குழந்தைகள் ஏற்றிச் செல்லக்கூடிய ஆட்டோவில் 10 முதல் 12 குழந்தைகள் வரை கூட ஏற்றப்படுகின்றனர். இதற்காகவே ஆட்டோவில் சில இருக்கை மாற்றங்களை கூட செய்து கொள்கின்றனர். பல மாணவ-மாணவிகள் இருக்கை போதாமல் டிரைவர் அருகில் இருபுறமும் தொற்றிக்கொண்டு செல்வதும் நிறைய இடங்களில் அரங்கேறுகிறது.

சிறைப்பறவைகள் போல்...

அதேபோல் வேன்களிலும், வாடகை கார்களிலும் ஒதுக்கீட்டுக்கு அதிகமாக ஏற்றிச்செல்லப்படுவதுண்டு. சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 மாணவர்களை மட்டுமே ஏற்றி வரவேண்டிய ஒரு வேனில் பள்ளி மாணவர்கள் 41 பேர் இருந்தனர். இதேபோல் 8 மாணவர்களை ஏற்றி வரவேண்டிய ஒரு டெம்போவில் 23 மாணவர்களை ஏற்றி கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இன்னும் சில ஆட்டோக்களில் பின்புறம் சரக்கு ஏற்றக்கூடிய இடத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளை பின்புறமாக அமரவைத்து கூண்டு கதவால் அடைத்து சிறைப்பறவைகள்போல் கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.

அதுமட்டுமின்றி பெரும்பாலான ஆட்டோக்கள், தனியார் வேன்கள் பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச்செல்லும் போது வேகமாக செல்வதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. அவ்வாறு செல்லும் போது விபத்துகளில் சிக்கிவிட்டால் குழந்தைகளின் நிலைமை மிகவும் பரிதாபமாகிவிடக்கூடும். சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பள்ளி மாணவிகள் 8 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு ஆட்டோ மீது பஸ் மோதியதில் அனைவருமே பலத்த காயம் அடைந்தனர். இதுபோன்ற பிரச்சினைகளை போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி சரியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பும், சவுகரியமான பயணமும் கிடைக்கும். இதுகுறித்து பெற்றோர், ஆசிரியர் மற்றும் போக்குவரத்து போலீசார் கூறிய கருத்துகளை பார்ப்போம்.

மன உளைச்சலை ஏற்படுத்தும்

அரியலூர் மாவட்டம் தா.பழூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் காமராஜ்:- மாணவர்களுக்கு நல்ல கல்வி எந்த அளவுக்கு அவசியமோ அதைவிட அவர்களுடைய பாதுகாப்பான பயணம் முக்கியம். ஆட்டோக்கள், மினி வேன்கள் ஆகியவற்றில் மாணவர்களை மூட்டைகளை அடுக்குவது போல் திணித்து அழைத்து செல்லப்படுகிறார்கள். இது ஒருபுறம் என்றால் அரசு பஸ்களிலும் பல வழித்தடங்களில் பள்ளி மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை பார்க்க முடிகிறது. இவை நிச்சயம் தவிர்க்கப்படவேண்டியவை ஆகும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செய்யப்படும்போது அவர்கள் பெரும்பாலும் பள்ளி இருக்கும் கிராமத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தால் மட்டுமே பள்ளியில் சேர்க்க வேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமிப்பதுடன், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தனியார் பள்ளி மாணவர்கள் ஆட்டோ மற்றும் வேன்களில் சிரமப்பட்டு செல்வதால் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே அளவுக்கு அதிகமாக மாணவ-மாணவிகளை அழைத்து செல்லும் தனியார் வாகன டிரைவர் மீது போலீசார் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை அரசு மற்றும் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மூச்சுத்திணறல்

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ஜெயசங்கர்:- ஜெயங்கொண்டத்தில் பள்ளி வேன் மற்றும் ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் குழந்தைகளை ஒன்றின் மீது ஒன்றாக உட்காருவதால் காற்று புகாமல் சில குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. சிலர் ஆட்டோ மற்றும் வேன்களில் குழந்தைகளை முன் பக்கத்தில் நிற்கவைத்து செல்வதால் சைடு பார்க்க முடியாத சூழலும் இருக்கிறது. எனவே குழந்தைகளின் பரிதாப நிலையை புரிந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்து குறைவான குழந்தைகளை ஏற்றி செல்ல அறிவுறுத்த வேண்டும்.

வேக கட்டுப்பாட்டு கருவி

போக்குவரத்து போலீசார்:- பள்ளி குழந்தைகளின் உயிர் விலைமதிக்க முடியாதது. எனவே டிரைவர்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும், கடமையுணர்வோடும் பணியாற்ற வேண்டும். வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே மாணவ-மாணவிகளை ஏற்றி செல்ல வேண்டும். டிரைவர்களுக்கு தனி கிரில் அமைத்து பள்ளி குழந்தைகள் அவர் அருகில் செல்ல முடியாத அளவில் இருக்க வேண்டும். பயணத்தின் போது கட்டாயம் உதவியாளர் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைபேசி எண் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தொலைபேசி எண், போலீஸ் நிலைய தொலைபேசி எண், 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண் கட்டாயம் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் படிக்கட்டுகள் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். அவசர கால கதவு நல்ல நிலையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்திருக்க வேண்டும். வாகனத்தின் முன்பும், பின்பும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஆட்டோக்களில் அதிகளவு பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லக்கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story