கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 12 Jun 2023 6:45 PM GMT (Updated: 12 Jun 2023 6:46 PM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. மகிழ்ச்சியுடன் வந்த மாணவ- மாணவிகளுக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.

விழுப்புரம்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு கடந்த 5-ந் தேதியன்றும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கோடை வெயில் சுட்டெரித்ததால் பள்ளிகள் திறக்கும் நாள் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 12-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதியும் (அதாவது நாளை) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பையொட்டி முன்னெச்சரிக்கையாக அனைத்து பள்ளிகளிலும் துய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு 218 அரசு நடுநிலைப்பள்ளிகள், 120 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 121 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 43 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும், 22 பகுதிநேர நிதி உதவி பெறும் பள்ளிகளும், 134 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 658 பள்ளிகள் திறக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 232 நடுநிலைப்பள்ளிகளும், 111 உயர்நிலைப்பள்ளிகளும், 133 மேல்நிலைப்பள்ளிகளும் என 476 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

1½ மாத கால கோடை விடுமுறை முடிந்து மாணவ- மாணவிகள் நேற்று தங்கள் பெற்றோர்கள், பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்று மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் சீருடையில் பள்ளிக்கு வந்தனர்.

இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவ- மாணவிகளை கல்வித்துறை அதிகாரிகளும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களும் உற்சாகமாகவும், இன்முகத்துடனும் வரவேற்றனர். பெரும்பாலான அரசு பள்ளிகளின் நுழைவுவாயிலில் மாணவ- மாணவிகளை வரவேற்கும் விதமாக வெல்கம் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற வாசகங்கள் எழுதியவாறு வண்ண கோலமிட்டிருந்தனர். ஒரு சில பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்தும் வரவேற்றனர். வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக நடந்த இறைவணக்கத்தில் மாணவ- மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டு பின்னர் ஆர்வமுடன் வகுப்பிற்கு சென்றனர்.

பாடப்புத்தகம் வழங்கல்

அதேபோல் பள்ளிகள் தொடங்கிய முதல் நாளிலேயே மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன் ஆகியோர், விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று பள்ளிக்கு வந்த மாணவிகளை வரவறே்று அவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். அப்போது அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு, மாவட்ட கலெக்டர் பழனி, துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story