கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறை முடிந்து மாவட்டத்தில் மீண்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கடலூரில் மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து கலெக்டர் அருண்தம்புராஜ் வரவேற்றார்.

கடலூர்

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வு மற்றும் பொதுத்தேர்வு முடிவடைந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு 12-ந் தேதியும் (அதாவது நேற்று), 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14-ந் தேதியும் (நாளை) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கல்வி உபகரணங்கள்

மேலும் பள்ளிகளை திறக்கும் முன்பு வகுப்பறைகள் மற்றும் வளாகங்களை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் எனவும், பள்ளி திறந்த உடனே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கிட வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் அரசு பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாணவர்களை வரவேற்ற கலெக்டர்

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 849 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து சுமார் 1½ மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறந்ததால், மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பூ கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து இறை வணக்கம் முடிந்ததும், மாணவ-மாணவிகளுக்கு முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாநககராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திடீரென வருகை தந்தார். பின்னர் அவர், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி அறிவுரைகளை வழங்கினார்

வகுப்பறைகளை ஆய்வு

தொடர்ந்து, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வகுப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் 10-ம் வகுப்பு மாணவிகளை சந்தித்து கற்றல் திறனை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


Next Story