கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
x

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன.

அரியலூர்

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு...

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இருப்பினும் கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் மாணவ-மாணவிகள் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை மீண்டும் தமிழக அரசு தள்ளி வைத்தது.

மேலும் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 14-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 73 அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், 98 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 61 தனியார் பள்ளிகள் என மொத்தம் 232 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளிகள் 124, உயர்நிலைப் பள்ளிகள் 105, மேல்நிலைப்பள்ளிகள் 93 என மொத்தம் 322 பள்ளிகள் திறக்கப்பட்டன.

உற்சாகமாக வந்தனர்

கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்த மாணவ- மாணவிகளை, அவர்களுடைய பெற்றோர் நேற்று பள்ளிக்கு செல்வதற்காக காலையில் சீக்கிரமாக எழுப்பி புறப்பட வைத்தனர். சில மாணவ- மாணவிகள் விடுமுறை முடிந்த கவலையிலும், பலர் அடுத்த வகுப்புக்கு செல்லப்போகிறோம், நண்பர்களை மீண்டும் சந்திக்க போகிறோம் என்ற உற்சாகத்திலும் பள்ளிக்கு புறப்பட்டனர்.

சில மாணவர்கள் தங்களுடைய நண்பர்களுடனும், மாணவிகள் தோழிகளுடனும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பேசியபடி பள்ளிக்கு சென்றனர். மேலும் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவ-மாணவிகள் தங்களுடைய உடைமைகள் அடங்கிய பெட்டி, வாளி உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்தனர். அவர்களை பெற்றோர் அழைத்து வந்து பள்ளியில் விட்டனர்.

இனிப்பு கொடுத்து வரவேற்றனர்

பள்ளிகளுக்கு வந்திருந்த மாணவ- மாணவிகளை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்று இனிப்பு வழங்கினர். மாணவிகளுக்கு ஆசிரியைகள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பள்ளகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளியின் முதல் நாளான நேற்று காலை வழிபாட்டு கூட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினர். அஸ்தினாபுரத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு நாளை (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story