1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு


1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
x

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்காக நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

கடலூர்

கோடை விடுமுறை

தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான அரசு பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதியுடன் முடிவடைந்ததும், கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 1-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 5-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 14-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது. அதன்படி கடந்த 12-ந் தேதி 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடிந்து சுமார் 1½ மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் 2219 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தேவையான எழுதுபொருட்கள், காலணிகள், சீருடைகள், புத்தகங்கள், நோட்டுகளை வாங்கி முன்கூட்டியே தயாராக வைத்திருந்தனர்.

பின்னர் நேற்று காலையில் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு கொண்டு வந்து விட்டனர். மாணவர்களும் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்தனர். இதையடுத்து பள்ளி வளாகத்திற்குள் வந்ததும் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளை பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து இறை வணக்கம் முடிந்ததும், மாணவர்கள் தங்களுக்கான வகுப்பறைகளுக்கு சென்றனர். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.


Next Story