கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு


கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
x

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

கரூர்

கரூர்,

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயின்ற மாணவ, -மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த மாதம் 12-ந்தேதி நிறைவடைந்தது. அதற்கு மறுநாளில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது.இதேபோல் 12-ம் வகுப்புக்கு கடந்த 23-ந்தேதியுடனும், 10-ம் வகுப்புக்கு கடந்த 30-ந்தேதியுடனும், பிளஸ்-1 வகுப்புக்கு கடந்த 31-ந்தேதியுடனும் அரசு பொதுத்தேர்வு நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ, -மாணவிகளுக்கு ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன.

உற்சாகம்

இதனையொட்டி கரூரில் காலை 8.30 மணி முதல் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வர தொடங்கினர். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகளில் நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் இருந்தனர். முதல்நாள் என்பதால் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்திருந்தனர். மேலும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக வந்திருந்தனர்.

பாடப்புத்தங்கள் வழங்கல்

தொடர்ந்து காலை 9.10 மணிக்கு இறைவணக்கம் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று இறைவணக்கம் செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். பின்னர் மாணவர்கள் தங்களது வகுப்பறைக்கு சென்று அமர்ந்தனர். பள்ளிகளில் முதல்நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. அந்த பாடப்புத்தகங்களை பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வருகிற 20-ந்தேதி 12-ம் வகுப்பிற்கும், 27-ந்தேதி 11-ம் வகுப்பிற்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தோகைமலை

தோகைமலை அருகே உள்ள மூட்டகாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தங்களை பள்ளி தலைமையாசிரியை தமிழரசி மற்றும் ஆசிரியர்கள் வழங்கினார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல் தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன.

நொய்யல்

நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் வந்தனர். அவர்களை பள்ளி தலைமையாசிரியை வாசுகி தலைமையிலான ஆசிரியர்கள் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.புங்கோடை குளத்துப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளிக்கு வந்த 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியை வளர்மதி தலைமையிலான ஆசிரியைகள் வரவேற்று பொம்மைகளை வழங்கி வகுப்பறைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

குளித்தலை

குளித்தலை நகரம் மற்றும் கிராமப்பகுதியில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்கும் விதமாக சிறப்பு ஏற்பாடுகள் அந்தந்த பள்ளிகளில் செய்யப்பட்டிருந்தது. இதில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும், ஏற்கனவே அப்பள்ளியில் பயின்றுவரும் மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு அவர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.இதேபோல் நச்சலூர், தரகம்பட்டி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன.


Next Story