ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்


ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
x
தினத்தந்தி 27 May 2023 12:02 AM GMT (Updated: 27 May 2023 12:03 AM GMT)

வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சி,

தமிழகம் முழுவதும் ஜூன் 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், வருகிற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

மேலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார். அப்போது வெப்பம் இன்னும் குறையவில்லை என்றும், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்றும் பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு

இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் பள்ளி திறப்பு தேதி விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டோம்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் திறக்கப்படும்.

மேலும் பள்ளி பஸ்களை ஆய்வு செய்யும் பணி நடைபெறும். போக்குவரத்து துறையினர் இந்த ஆய்வு பணியை மேற்கொள்வார்கள். இணை ஆணையர் அளவிலான அதிகாரி நியமிக்கப்பட்டு கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் இப்பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டந்தோறும் தனியார் பள்ளி பஸ்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

கோடை விடுமுறை

ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் சில விஷயங்களில் பிடிவாதம் காட்டுகிறார்கள். அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், குளறுபடிகளை சரி செய்த பிறகு கலந்தாய்வு நடத்த திட்டமிட்டோம். அதன்படி கலந்தாய்வு நடைபெறுகிறது. சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக பரவலாக செய்தி வருகிறது. இதுபோன்று சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வற்புறுத்துகின்றனர். கோடை விடுமுறை என்பது பள்ளி மாணவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்வதற்காக மட்டுமே. எனவே இதுபோன்ற சிறப்பு வகுப்புகளை நடத்த பெற்றோர்கள் வற்புறுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story