6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறை முடிந்து விழுப்புரம் மாவட்டத்தில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு கடந்த 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தியது. இதையடுத்து பள்ளிகள் திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற தமிழக அரசு ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும் என்று மாற்றியது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையாததால், 2-வது முறையாக பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தூய்மை பணிகள்
அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந்தேதியும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு 12-ந் தேதியும் (அதாவது இன்று) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பு அனைத்து தூய்மை பணிகளையும் மேற்கொள்ளவும், பள்ளிகள் திறக்கும் முதல் நாளே மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் பழனி உத்தரவின்பேரில் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி வளாகம், வகுப்பறையில் உள்ள குப்பைகளை அகற்றி, தூய்மை பணி செய்யப்பட்டது.
இதில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சசிகலா தலைமையில் பள்ளி வளாகம், வகுப்பறைகள் துாய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதந்த பணியை நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணை தலைவர் சித்திக்அலி மற்றும் நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நோட்டு, புத்தகம்
தொடர்ந்து கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், பகுதிநேர நிதி உதவி பள்ளிகள், சிறப்பு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 1,806 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் வளாகம், வகுப்பறை, ஆய்வகம், ஆசிரியர், தலைமை ஆசிரியர் அறை, கணினி அறை, குடிநீர் தொட்டி, கழிவறை உள்ளிட்ட அனைத்தும் தூய்மைப்பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
மேலும் பள்ளி திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதால், அதற்கேற்ப அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே நோட்டு, புத்தகம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இன்று அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு, புத்தகம் வழங்கப்படும் என்றார்.