கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது
கரூர்,
கோடை விடுமுறை
கரூர் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயின்ற மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த மாதம் 12-ந்தேதி நிறைவடைந்தது. அதற்கு மறுநாளில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இதேபோல் 12-ம் வகுப்புக்கு கடந்த 23-ந்தேதியுடனும், 10-ம் வகுப்புக்கு கடந்த 30-ந்தேதியுடனும், பிளஸ்-1 வகுப்புக்கு கடந்த 31-ந்தேதியுடனும் அரசு பொதுத்தேர்வு நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்புகள் பயில உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு, நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
பாடப்புத்தகங்கள்
இதனையொட்டி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவின் பேரில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தகங்கள் வினியோக மையத்தில் இருந்து கரூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது.
சுத்தம் செய்யும் பணி
மேலும் அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இன்று பள்ளிகள் திறப்பதால் மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான சீருடை, பேக், ஷு மற்றும் நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பெற்றோருடன் கடைவீதிக்கு வந்து வாங்கி சென்றனர். தற்போது பள்ளிகள் அனைத்தம் தயார் நிலையில் உள்ளது. வருகிற 20-ந்தேதி 12-ம் வகுப்பிற்கும், 27-ந்தேதி 11-ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
நொய்யல்
இதேபோல் நொய்யல் ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்தது.