1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு


1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு
x

ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்

கோடை விடுமுறை

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயின்ற மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த மாதம் 12-ந்தேதி நிறைவடைந்தது. அதற்கு மறுநாளில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இதேபோல் பிளஸ்-2 வகுப்புக்கு கடந்த 23-ந்தேதியுடனும், 10-ம் வகுப்புக்கு கடந்த 30-ந்தேதியுடனும், பிளஸ்-1 வகுப்புக்கு கடந்த 31-ந்தேதியுடனும் அரசு பொதுத் தேர்வு நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டன.

இந்த நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்திருந்தது. மேலும் தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்புகள் பயில உள்ள மாணவ-மாணவிகள் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு, நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

பாடப்புத்தகங்கள்

பள்ளி திறந்த முதல் நாளில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவினால், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பள்ளிகளில் அரசு உத்தரவின் பேரில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் நாளை பள்ளி செல்ல மாணவ-மாணவிகள் தங்களுக்கு தேவையான சீருடை, பேக், ஷு மற்றும் நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பெற்றோருடன் கடைவீதிக்கு வந்து வாங்கி சென்றனர்.


Next Story