கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு


கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு
x

கோவையில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை, ஜூன்.14-

கோவையில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பட்டது. இதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று 1,212 அரசு பள்ளிகளும், 177 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 654 தனியார் பள்ளிகளும் என 2,043 பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து மிகவும் ஆர்வத்துடன் வந்தனர். பெரும்பாலான மாணவ-மாணவிகள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். அரசு பள்ளிகளில் நுழைவு வாயிலில் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட்டது.

அடம் பிடித்த குழந்தைகள்

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களின் வாசல்களில் நேற்று காலை 8 மணி முதல் 9.30 மணி வரை பெற்றோர்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. முதல் முறையாக பள்ளிக்கு வந்த எல்.கே.ஜி. குழந்தைகள் சிலர் பெற்றோரை விட்டு பிரிய மனம் இன்றி வகுப்புக்குள் செல்ல அடம் பிடித்தனர். அந்த குழந்தைகளை பெற்றோர் சாக்லெட் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக வீடுகளில் பெற்றோர் விளக்கேற்றிவைத்து சாமி கும்பிட்டும், குழந்தைகளை வாழ்த்தியும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சில பெற்றோர் கோவிலுக்கு அழைத்து சென்றும் சாமி தரிசனம் செய்த பின்பு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றனர். இதேபோல் மற்ற மதத்தினரும் தங்கள் கடவுளை வழிபட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

உற்சாக வரவேற்பு

பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் சாக்லெட் கொடுத்து ஆசிரியர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பரதநாட்டியம் ஆடியும் உற்சாகமாக வரவேற்கப்பட்டது. சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பள்ளிகள் திறந்ததும் ஒருவாரம் மாணவ-மாணவிகளுக்கு உளவியல் ரீதியான பாடம் நடத்தவேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அரசு அறிவுரை தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தாமல் கொரோனாவை எதிர்கொள்வது, பாதுகாப்பாக இருப்பது போன்றவை குறித்து ஆசிரியர்கள் விளக்கினர்.

பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வந்த ஒரு சில பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் பக்கத்தில் ஸ்டேட்டஸ் வைத்து மகிழ்ந்தனர்.

பாடப்புத்தகங்கள் வினியோகம்

முதல் வகுப்புகளுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தக பை வழங்கப்பட்டன. அவற்றை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர். ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் சமீரன் நேரடியாக சென்று மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி, அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

மேலும் அரசு பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா, மாநகராட்சி கல்வி அதிகாரி பாண்டியராஜன் ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் சேர நேற்று முறையான அறிவிப்பு வரவில்லை என்று சில ஆசிரியர்கள் தெரிவித்ததால் தங்கள் குழந்தைகளை சேர்க்க வந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் சென்றனர்.

கூடுதல் பஸ்கள் இயக்கம்

பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி கோவை மாநகரத்தில் நேற்று பள்ளி மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story