குஞ்சப்பனை உண்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
குஞ்சப்பனை உண்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோத்தகிரி
அறிவியல் மனோபாவம் மற்றும் விழிப்புணர்வு தினத்தையொட்டி கோத்தகிரி அருகேயுள்ள குஞ்சப்பனை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. பள்ளி தலைமைஆசிரியர் வினுதாஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் கே.ஜே.இராஜு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் அறிவியல் எழுத்தறிவு 70 சதவீதத்திற்கு மேல் இருக்கும் போது இந்தியாவின் அறிவியல் எழுத்தறிவு ஒற்றை இலக்க அளவில் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. வருங்கால நவீன தொழில்நுட்ப்பங்களான செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் மெகானிக்ஸ், நேனோ தொழில்நுட்பம் போன்றவை இந்த உலகத்தையே தலைகீழாக புரட்டிப்போடும் சூழ்நிலையில் நமது கல்வித்தரமும் அந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற வேண்டிய கட்டாயத்திலுள்ளது. மனப்பாட கல்வி காலாவதியாகியுள்ளது. புதியன படைக்கும் ஆற்றலை கல்வி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். நாம் வாழ்வதற்கு இருக்கும் ஒரே பூமி புவிவெப்பம், காலநிலை மாற்றம் போன்ற பல நிகழ்வுகளால் நோய்வாய் பட்டுள்ளது. காற்று மண்டலம், நீர் மண்டலம் போன்று ஒரு பிளாஸ்டிக் மண்டலம் பூமியில் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தன்னார்வ அமைப்பை சேர்ந்த முரளிமேனன் பள்ளிக்கு எளிய அறிவியல் பரிசோதனை பெட்டகத்தை இலவசமாக வழங்கினார். முன்னதாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நிவேதிதா அனைவரையும் வரவேற்றார். களப்பணியாளர் கெவின் நன்றி கூறினார்.