அறிவியல் கண்காட்சி
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு கே.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மகுடீஸ்வரன், கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பப் பயிலக முதல்வர் குழந்தைவேலு, இயக்குனர் (நிர்வாகம்) பேராசிரியர் மோகன், பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் சீனிவாசன் கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். கே.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார் கண்காட்சியின் இளநிலைப் பிரிவில் 6 முதல் 8-ம் வகுப்பு மற்றும் முதுநிலை பிரிவில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அறிவியல் தொழில்நுட்பம், இயற்கை வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உதவிகரமான கண்டுபிடிப்புகள் போன்ற கருத்தை மையமாகக் கொண்டு படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் 250-க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இதன் நிறைவு விழாவில் கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் தியாகராஜா கலந்துகொண்டு பேசினார். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உமா மகேஸ்வரி, ஆராய்ச்சியாளரும், தொழில் முனைவோருமான நவீன் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினர். முதுநிலை பிரிவில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரி, தயாநிதி ஆகிய மாணவர்கள் முதல் பரிசையும், இளநிலை பிரிவில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஷர்மிதா, இதயஸ்ரீ ஆகிய மாணவிகள் முதல் பரிசையும் பெற்றனர். முடிவில் கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப பயிலக துறை தலைவர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.