சாலை மோசமாக உள்ளதால் பஸ் சேவையை நிறுத்த முடிவு
வெள்ளமலை எஸ்டேட் டாப் பகுதியில் சாலை மோசமாக உள்ளதால் பஸ் சேவையை நிறுத்த முடிவு செய்து உள்ளதாக நகராட்சி ஆணையாளரிடம், போக்குவரத்துக்கழக மேலாளர் கடிதம் அளித்தார்.
வால்பாறை
வெள்ளமலை எஸ்டேட் டாப் பகுதியில் சாலை மோசமாக உள்ளதால் பஸ் சேவையை நிறுத்த முடிவு செய்து உள்ளதாக நகராட்சி ஆணையாளரிடம், போக்குவரத்துக்கழக மேலாளர் கடிதம் அளித்தார்.
பாதுகாப்பு கேள்விக்குறி
வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் பிரிவில் இருந்து வெள்ளமலை எஸ்டேட் டாப் பிரிவுக்கு சுமார் 15 கிலோ மீட்டர் தூர சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுடன் நேற்று நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) வெங்கடாசலத்திடம் கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தில், வெள்ளமலை எஸ்டேட் டாப் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள சாலை, மழை பெய்துவிட்டால் மோசமான நிலைக்கு சென்றுவிடுகிறது. இதனால் ஓட்டுனர், நடத்துனர், பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. மேலும் பஸ்சை இயக்க ஓட்டுனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே முழு சேவையை நிறுத்திவிட்டு, காலை மற்றும் மாலையில் மட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பஸ்சை இயக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு தீர்வு காண சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சாலையை சீரமைக்க நடவடிக்கை
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-
எஸ்டேட் நிர்வாகம் இப்போதுதான் முழுமையாக நகராட்சி வசம் சாலையை ஒப்படைத்து உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சாலையை சீரமைக்க அனுமதியும் கிடைத்து விட்டது. இனி நகராட்சி கூட்டத்தில் உரிய நிர்வாக அனுமதி பெறப்பட்டு, டெண்டர் விட்டு சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்படும். இந்த நடைமுறைகளுக்காக 2 முதல் 3 மாதங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும். இருந்தாலும் சாலை அமைக்கும் பணியை விரைவாக தொடங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.