கொள்ளையர்கள் குறித்து அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைத்துள்ளது


கொள்ளையர்கள் குறித்து அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைத்துள்ளது
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்து அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைத்துள்ளதால் 2 அல்லது 3 நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறினார்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்து அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைத்துள்ளதால் 2 அல்லது 3 நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறினார்.

4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் 2 இடங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு இடங்களிலும் என 4 இடங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் உள்ள பணம் எடுக்கும் எந்திரங்கள் வெல்டிங் எந்திரங்கள் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு ரூ.72¾ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திருவண்ணாமலையில் முகாமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை நடைபெற்று உள்ளது. இதுகுறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவத்தை ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரங்கள் பற்றி நன்கு அறிந்த செயல்முறை குற்றவாளிகள் இதனை செய்து இருக்க வேண்டும்.

தமிழகத்தில் முதல்முறை

ஏ.டி.எம். திருட்டில் ஈடுபட கூடிய குறிப்பிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த கும்பல் இந்த சம்பவத்தை செய்து உள்ளனர். இதேபோன்று கொள்ளை சம்பவம் மராட்டியத்தில் 3 சம்பவமும், மத்திய பிரதேசத்தில் 2 சம்பவமும், ஒடிசாவில் ஒரு சம்பவமும் நடந்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்று நடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை, வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் தமிழக போலீசார் திறம்பட செயல்பட்டு கைது செய்தனர்.

இந்த குற்றவாளிகளும், தற்போது நடந்து உள்ள கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளும் ஒரே பகுதியில் இருந்து வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரசு தனி கவனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் பிடிக்க அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. கொள்ளையர்களை பிடிக்க 9 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும், 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளும் உள்ளனர்.

ஒரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழுவினர் வெளிமாநிலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஏ.டி.எம். மையங்களில் இருந்த பணம் எடுக்கும் எந்திரங்கள் ஒரே மாதிரியான எந்திரங்கள். இந்த எந்திரங்களில் டெக்னிக்கல் அறிவியல் கை தேர்ந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது

பணம் எடுக்கும் எந்திரத்தில் உள்ள அலாரத்தை செயல் இழக்க செய்து துல்லியமாக செயல்பட்டு உள்ளனர். திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் 2 மணி நேரத்திற்குள் நடந்துள்ளது.

கொள்ளையர்கள் குறித்து அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைத்துள்ளதால் 2 அல்லது 3 நாட்களில் நல்ல தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story