ரேஷன் கடையில் திடீர் ஆய்வு:இருப்பு குறைவாக காட்டிய விற்பனையாளருக்கு அபராதம்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை


ரேஷன் கடையில் திடீர் ஆய்வு:இருப்பு குறைவாக காட்டிய விற்பனையாளருக்கு அபராதம்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2022 12:30 AM IST (Updated: 12 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு நடத்தியதில் இருப்பு குறைவாக காட்டிய விற்பனையாள ருக்கு அபராதம் விதித்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை மேற் கொண்டார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு நடத்தியதில் இருப்பு குறைவாக காட்டிய விற்பனையாள ருக்கு அபராதம் விதித்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை மேற் கொண்டார்.

கலெக்டர் திடீர் ஆய்வு

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று வந்தார். பின்னர் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சி மாலேகவுண்டம்பாளையத்திலுள்ள ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது கலெக்டர் சமீரன் அந்த ரேஷன் கடையில் உள்ள விற்பனையாளரிடம் மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவுகளை கேட்டு அறிந்தார்.

மேலும் விற்பனை முனைய எந்திரத்தில் ஆய்வு செய்ததுடன், அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்த பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விற்பனையாளருக்கு அபராதம்

இந்த ஆய்வில் ரேஷன் கடையில் பொருட்களில் இருப்பு குறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடையின் விற்பனையாளருக்கு அபாரதம் விதித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு நின்ற குடும்ப அட்டைதாரர்களிடம் அனைத்து பொருட்களும் முறையாக கிடைக்கிறதா? பொருட்களின் தரம் மற்றும் எடைகள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ஊராட்சியில், மாலேகவுண்டன்பாளையம் முதல் வடக்கிபாளையம் வரை ரூ.67.70 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருவதையும் கலெக்டர் சமீரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சாலையின் ஓரங்களில் உள்ள வடிகால் அமைப்புகளை முறையாக சுத்தம் செய்து, புற்களை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.

சப்-கலெக்டர் அலுவலகம்

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கே.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் (பொ) அனிதா, உதவி இயக்குனர் (சாலை மற்றும் பாலங்கள்) செந்தில்குமார். கிணத்துக்கடவு ஆணையாளர் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் உலகநாதன், மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்கிற சாந்தகுமார் ஊராட்சி செயலாளர் சசி பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் சமீரன் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகம் சென்றார். அங்கு பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், பதிவறையினையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரேசுபம்ஞானதேவ்ராவ், நேர்முக உதவியாளர்வெங்கடாச்சலம், துணை தாசில்தார் சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story