4 பேருக்கு அரிவாள் வெட்டு; தந்தை-மகன் கைது
4 பேருக்கு அரிவாள் வெட்டு சம்பவத்தில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
மணப்பாறை:
அரிவாள் வெட்டு
திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள கொடும்பப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 70). இவரது மகன்கள் ராமசாமி (56), சிவக்குமார் (42), செந்தில்குமார் (40). இதில் செந்தில்குமாரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகள் அருகில் உள்ள அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது வீட்டில் விழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டில் யாரும் இல்லாதபோது தென்னை மரத்தை வெட்டி விட்டனர்.
இதுகுறித்து சிவக்குமார், ராமசாமி, நாகம்மாள் மற்றும் தனம் ஆகியோர் செல்வம், தினேஷ் ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் 2 பேரும் சேர்ந்து சிவக்குமார் உள்ளிட்ட 4 பேரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவர்
*திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற, வடக்கு காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த சாதிக் என்ற இலியாசை (65) திருவெறும்பூர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்து 950, மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
*திருச்சி வேங்கூர் கீழ முருகூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜான் புஷ்பநாதனின் மகன் சஞ்சய்(வயது 17). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு நண்பர்களுடன் அவர் சென்றார். அங்கு அவர் உள்பட 3 பேர் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் தத்தளித்தனர். இதில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், சஞ்சய் நீரில் மூழ்கினார். தீயணைப்பு துறை வீரர்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அவரது நிலை என்ன? என்பது தெரியவில்லை.
ஆர்ப்பாட்டம்
*ஆலம்பட்டி புதூரில் ஒரு மளிகை கடையில் உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 15 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்கு சீல் வைத்து, கடையின் உரிமையாளர்கள் ஆலம்பட்டிபுதூரை சேர்ந்த தங்கராஜ்(53) மற்றும் முருகேசன்(50) ஆகியோரை இனாம்குளத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*முசிறி நடராஜ் நகர் பகுதியை சேர்ந்த ரஜினிகாந்த் மகன் நவீன்குமார் (29) மோட்டார் சைக்கிளில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், லாரி மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
*துறையூரை அடுத்த கண்ணனூர் ஊராட்சி எழுத்தர் தாக்கப்பட்டதை கண்டித்து, துறையூர், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 54 ஊராட்சிகளின் எழுத்தர்கள் மற்றும் ஒன்றிய அலுவலக பணியாளர்கள் நேற்று துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். எழுத்தரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
*திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற இஸ்மாயில் என்ற புட்டு இஸ்மாயிலை(48) கோட்டை போலீசார் கைது செய்தனர்.