மனைவியை அழைக்க சென்ற தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலனுடன் தங்கி இருந்த மனைவியை அழைக்க சென்ற தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலனுடன் தங்கி இருந்த மனைவியை அழைக்க சென்ற தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
கோவை க.க. சாவடியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). மரம் அறுக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் மரம் அறுக்கும் போது, அவருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது மனைவிக்கு கோட்டூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்ததும் லட்சுமணன் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் வீட்டில் இருந்த அவரது மனைவி திடீரென்று காணாமல் போனதாக தெரிகிறது.
போலீசார் விசாரணை
மேலும் அவரது மனைவி கோட்டூரில் உள்ள ஒரு வீட்டில் மணிகண்டனுடன் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமணன் அங்கு வந்து மனைவியை அழைத்து உள்ளார். அப்போது லட்சுமணனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அங்கிருந்த அரிவாளை எடுத்து லட்சுமணனை வெட்டி உள்ளார்.
இதில் தலையில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லட்சுமணன் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.