கடலூரில் கடல் சீற்றம்


கடலூரில் கடல் சீற்றம்
x

மோக்கா புயல் எதிரொலியாக கடலூரில் கடல் சீற்றமாக இருந்தது.

கடலூர்

கடல் சீற்றம்

தென்கிழக்கு மற்றும் அதைஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் உருவான மோக்கா புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது. இந்த புயல் நேற்று தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடந்தது. இந்த புயலையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் தாக்கியது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் நடமாட முடியாமலும் சிரமப்பட்டனர்.

இதற்கிடையே இந்த மோக்கா புயல் காரணமாக கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா கடலில் நேற்று முன்தினம் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் சீறி பாய்ந்தன.

மீன்பிடிக்க செல்லவில்லை

அதேபோல் நேற்றும் கடலூர் கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. இருப்பினும் கோடை வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் கடலூர் சில்வர் பீச்சுக்கு வந்து சீறி வந்த கடல் அலையில் ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் குளித்ததை பார்க்க முடிந்தது. சிறிய பைபர் படகு மூலம் மீனவர்கள் ஒரு சிலர் கடற்கரையோரம் சென்று மீன்பிடித்தனர். அப்போது மீனவர்கள் சிலர் சென்ற படகு கடல் அலையில் வேகமாக மோதியது. அப்போது அந்த படகு அலையில் சிக்கி சில அடி தூரத்திற்கு மேலே சென்று மீண்டும் தண்ணீரில் விழுந்து தடுமாற்றத்துடன் சென்றது.

இருப்பினும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் நேற்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையோரங்களிலும், கடலூர் துறைமுகம் மீன்பிடி தளத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.


Next Story