விருகம்பாக்கத்தில் சினிமா டப்பிங் சங்க கட்டிடத்துக்கு 'சீல்' - அனுமதி பெறாததால் மாநகராட்சி நடவடிக்கை


விருகம்பாக்கத்தில் சினிமா டப்பிங் சங்க கட்டிடத்துக்கு சீல் - அனுமதி பெறாததால் மாநகராட்சி நடவடிக்கை
x

விருகம்பாக்கத்தில் அனுமதி பெறாததால் சினிமா டப்பிங் சங்க கட்டிடத்திற்கு ‘சீல்’ வைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

சென்னை

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், விஜயராகவபுரம், 4-வது தெருவில் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. 'தென்னிந்திய சினி மற்றும் டி.வி. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியன்' என்ற பெயரில் செயல்படும் இந்த கட்டிடத்துக்கு 'டத்தோ ராதாரவி வளாகம்' என பெயரிட்டுள்ளனர். இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி உள்ளார்.

2011-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடத்துக்கு சென்னை மாநகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு தகுந்த ஆவணங்களை வழங்காத சங்க நிர்வாகிகள், இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, டப்பிங் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த கட்டிட விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டது. அந்த கட்டிடத்தில் இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்த 2 மாத அவகாசமும் வழங்கியது.

ஆனால் கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கோடம்பாக்கம் மண்டல செயற்பொறியாளர் இனியன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடத்துக்கு அதிரடியாக 'சீல்' வைத்தனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story