திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் 10 கடைகளுக்கு சீல்வைப்பு


திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் 10 கடைகளுக்கு சீல்வைப்பு
x
தினத்தந்தி 13 July 2022 7:00 PM GMT (Updated: 13 July 2022 7:00 PM GMT)

திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் 10 கடைகள் சீல்வைக்கப்பட்டது. வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்

எலச்சிபாளையம்:-

திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் 10 கடைகள் சீல்வைக்கப்பட்டது. வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

10 கடைகளுக்கு சீல்வைப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு சொந்தமாக 353 கடைகள் உள்ளன. திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் மட்டும் 81 கடைகள் உள்ளன. இந்த 81 கடைகளில் 55 கடைக்காரர்கள் பல மாதங்களாக வாடகை தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த வாடகை பாக்கி ரூ.80 லட்சம் வரை உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பணம் செலுத்தப்படவில்லை.

இதைதொடர்ந்து நேற்று நகராட்சி அதிகாரிகள் 10 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கடைகளை அடைத்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கோரிக்கை மனு

இதற்கிடையே வியாபாரிகள், திருச்செங்கோடு நகராட்சிக்கு பேரணியாக வந்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆணையாளர் கணேசிடம் வழங்கினார். வியாபாரிகளிடம், பஸ் நிலைய கடை வாடகையை கொண்டுதான் நகராட்சி சில செலவுகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே வாடகை பாக்கி தொகையை உடனே செலுத்த வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய கடை வியாபாரிகள் சங்க தலைவர் சிவா கூறும் போது, கொரோனா காலகட்டத்தில் கடந்த ஆட்சியாளர்கள் 2 மாத வாடகையை தள்ளுபடி செய்தனர். அதேபோன்று இந்த ஆட்சியாளர்கள் 4 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லை என்றால் வாடகை பாக்கியை செலுத்த காலஅவகாசம் வேண்டும் என்றார்.


Next Story