முறைகேடு செய்த இ-சேவை மையத்திற்கு சீல்


முறைகேடு செய்த இ-சேவை மையத்திற்கு சீல்
x

முறைகேடு செய்த இ-சேவை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் பிரபு என்பவர் மக்கள் பொது சேவை மையம் நடத்தி வருகின்றார். இவர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு செய்தல், அளந்து அத்துக்காட்டுதல், சொத்து மதிப்பு சான்று, நில வரி, இறப்பு மற்றும் பிறப்பு சான்று கோரி இ.சலான் மூலம் அரசு கணக்கில் பணம் செலுத்த வரும் பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்று அதனை அரசு கணக்கில் பணம் செலுத்தாமல் போலியான இ.சலான்களை பொதுமக்களிடம் கொடுத்து முறைகேடு செய்து வந்துள்ளார். அதேபோன்று விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கொடுக்கும் பணத்தையும் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணக்கு பார்த்தபோது குறைவாக இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வட்டாட்சியர் விண்ணப்பிக்கப்பட்ட இ-சலான்களை ஆய்வு செய்தனர். அப்போது பிரபு வழங்கிய சலான்கள் அனைத்தும் போலி என்று தெரியவந்தது. இவர் அரசு கருவூலத்தில் பணத்தை கட்டாமல் விண்ணப்பித்து பெயிலியர் என்று வரும் இ-சலானை கணினி மூலம் சக்சஸ் என்று மாற்றிக்கொடுத்துள்ளார். இதேபோல் இந்த மாதம் மட்டும் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தாசில்தார் பாக்கியம் விக்டோரியா அந்த இ-சேவை மையத்தில் இருந்த கணினி, பிரிண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தார். இதனைக் கண்ட பிரபு அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் பிரபு மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு செந்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவின் பேரில் செந்துறை கிராம நிர்வாக அதிகாரி வாழவந்தான் அந்த இ-சேவை மையத்தை பூட்டி சீல் வைத்தார். இ-சேவை மைய உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தும்போது தான் எவ்வளவு பொதுமக்களின் பணத்தை மோசடி செய்துள்ளார் என்று தெரியவரும். தாலுகா அலுவலகம் எதிரே உள்ள மையத்திலேயே நடைபெற்ற இந்த துணிகர மோசடி அரியலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story