காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் சீமான் அறிவிப்பு


காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் சீமான் அறிவிப்பு
x

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி சென்னையில் இந்த மாதம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மண்டல நிர்வாகிகளிடம் பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை.

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்-மந்திரி, நெய்வேலியில் இருந்து வரும் மின்சாரம் தேவையில்லை என்று கூற வேண்டியதுதானே. காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி சென்னையில் இந்த மாதம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.

ஓட்டுக்காக பணம்...

தமிழகத்தில் ஆசிரியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், விவசாயிகள் போராடுகிறார்கள். இதற்கெல்லாம் பதில் கூறாமல் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் கொடுத்து சாதனை செய்து விட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். இது ஓட்டுக்காக கொடுக்கிற பணம் என்று மக்களுக்கு தெரியவில்லையா?. 2 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. இதனால் கியாஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. வருகிற 4-ந் தேதி காட்டுமன்னார்கோவில் அருகே மா.ஆதனூர் கிராமத்திற்கு கவர்னர் ஆர்.என். ரவி வருகிறார். அங்கு ஆதிதிராவிடர்களுக்கு பூணூல்போட உள்ளதாக கேள்விப்பட்டேன். ஆனால் அவர் பூணூலை போட்டுவிட்டு அனைவரையும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் அழைத்து செல்வாரா?. பூணூலை கடைசி வரை போட்டிருப்பார்களா? இவையெல்லாம் தேர்தல் வருவதை முன்னிட்டு பா.ஜ.க. செய்யும் வேலை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story