சீமான் பேட்டி


சீமான் பேட்டி
x

காவிரி பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் தமிழக அரசியல் கட்சியினர் தங்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுகிறார்கள் என்று, ஆயக்காரன்புலத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

நாகப்பட்டினம்

காவிரி பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் தமிழக அரசியல் கட்சியினர் தங்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுகிறார்கள் என்று, ஆயக்காரன்புலத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

பொதுக்கூட்டம்

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலத்தில் நாம் தமிழா் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மண்டல செயலாளர் அப்பு, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் பாசறை செயலாளர் கார்த்தி, மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள், துணை ஒருங்கிணைப்பாளர் ஹீமாயுன் ஆகியோர் பேசினர்.

அவமானம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகாவில் சித்தா பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த்தை கன்னட அமைப்பினர் உள்ளே புகுந்து விரட்டிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தார்த் ஒரு கலைஞன். அவருக்கும் தண்ணீர் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை. அவர் காவிரியில் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்கவும் இல்லை. இதற்கு அரசியல் தலைவர்கள் பேசி தீர்வு காண வேண்டும்.

இந்த சம்பவத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை. இது அவமானம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

குடும்ப நலனுக்காக....

பின்னர் சீமான் நிருபா்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடுகின்றன. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் காவிரி பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் தங்களின் குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடுகின்றனர். கர்நாடகாவில் தமிழக முதல்-அமைச்சரை அவமரியாதை செய்கின்றனர். இதற்கு தி.மு.க.வினர் கண்டனம் தெரிவிக்கவில்லை. நான் மட்டும் தான் கண்டனம் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தொகுதி செயலாளர் முருகவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story