சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்


சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Aug 2023 9:30 PM GMT (Updated: 1 Aug 2023 9:30 PM GMT)

சிறுபான்மையினரை சாத்தான் பிள்ளைகள் என்று பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஊட்டியில் பேட்டி அளித்தார்.

நீலகிரி

ஊட்டி

சிறுபான்மையினரை சாத்தான் பிள்ளைகள் என்று பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஊட்டியில் பேட்டி அளித்தார்.

செயற்குழு கூட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மனித நேய வணிகர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இதனால் வியாபாரிகள் பாதிப்படைவதை தடுக்க வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். தெருவோர வணிகர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி.யால் வணிகர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே, அமலாக்கத்துறையின் கீழ் ஜி.எஸ்.டி.யை கொண்டு வரக்கூடாது. நாடு முழுவதும் பா.ஜ.க. எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனால் வகுப்புவாத மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பா.ஜ.க. பேச்சாளராக மாறி விட்டார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறுபான்மையினரை சாத்தானின் பிள்ளைகள் என்று பேசி உள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பேச்சாளராக மாறியுள்ளார். வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் பேசிய சீமான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

பழங்குடியினரான ஜனாதிபதி மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்து எதுவும் பேசவில்லை. அண்ணாமலை லட்சக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் தேடிக் கொள்கிறார். அவரது நடைபயணம் நீரிழிவு, கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவும். தமிழக மக்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.

தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

பா.ஜ.க. ஆட்சியில் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். முகாம் நடத்தப்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் கல்வி நிறுவனங்களில் இத்தகைய கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story