தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் மனு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை


தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் மனு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x

விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் தாக்கல் செய்துள்ள மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனனர். இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் சீமான் ஆஜராகி இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் இயக்கிய 'வாழ்த்துக்கள்' என்ற திரைப்படத்தில் வெண்ணிலை என்ற கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்தார். விஜயலட்சுமியின் அக்கா, பிரபல நடிகை ஜெயபிரதாவின் சகோதரரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால், விஜயலட்சுமி கேட்டுக்கொண்டதால், மனிதாபிமானத்துடன் உதவி செய்தேன்.

ரகசியம் இல்லை

அப்போது, விஜயலட்சுமிக்கும், எனக்கும் ஆரோக்கியமான பழக்க வழக்கம் இருந்தது. இது எங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நன்கு தெரியும். இதில் மறைப்பதற்கு ரகசியம் எதுவும் இல்லை. என் குடும்பத்தினர், எனக்கு நெருக்கமானவர்களுடனும் விஜயலட்சுமியும், அவரது குடும்பத்தினரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்த காலக்கட்டத்தில்தான் கெட்ட எண்ணத்துடன் விஜயலட்சுமி திட்டத்துடன் செயல்படுவது தெரியவந்தது. தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி அவர் வற்புறுத்த தொடங்கியதும், அவரை விட்டு விலகி சென்று விட்டேன். இதையடுத்து எனக்கு தொந்தரவு கொடுக்க தொடங்கி விட்டார்.

ரத்துசெய்ய வேண்டும்

ஏற்கனவே 2011-ம் ஆண்டு இதேபோல எனக்கு எதிராக கொடுத்த புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தற்போது, 12 ஆண்டுகளுக்கு பின்னர், அதேபோன்ற புகாரை கொடுத்துள்ளார். இதன்படி பதிவான வழக்கை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


Next Story