மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடுத்த மாதம் 28-ந் தேதி ஆர்ப்பாட்டம்-மாநில தலைவர் அறிவிப்பு


மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடுத்த மாதம் 28-ந் தேதி ஆர்ப்பாட்டம்-மாநில தலைவர் அறிவிப்பு
x

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 28-ந் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில தலைவர் அறிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அன்பரசன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தின் இயக்க செயல்பாடுகள் பற்றி மாநில பொதுச்செயலாளர் மாரிமுத்து பேசினார். நிதியும் பொது நிகழ்வும் பற்றி மாநில பொருளாளர் இளங்கோ பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் அன்பரசன் நிருபர்களிடம் கூறுகையில், ''உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் 40 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்யும் பொழுது பணிமூப்பு அடிப்படையிலேயே நியமனம் செய்ய வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின்கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது'' என்றார். முன்னதாக கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, முன்னாள் பொது செயலாளர் மாரிமுத்து உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன.


Next Story