ஏரியில் இருந்து மண் எடுக்க அனுமதி தராமல் அலைக்கழிப்பு


ஏரியில் இருந்து மண் எடுக்க அனுமதி தராமல் அலைக்கழிப்பு
x

விவசாய நிலங்களுக்கு ஏரியில் இருந்து மண் எடுக்க அனுமதி தராமல் அலைக்கழிக்கப்படுவதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சப்-கலெக்டர் (பொறுப்பு) சத்தியபிரசாத் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திலகவதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

அலைக்கழிப்பு

கலவையில் நீண்ட நாட்களாக பாழடைந்துள்ள நூலகத்தை சீரமைக்க வேண்டும். பழுதான கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருவது குறித்து பல முறை மனு அளித்தும் மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வில்லை. புத்தகங்கள் மழை, வெயிலால் சேதமடைந்து வருகிறது. கலவையை அடுத்த வெள்ளம்பி கிராமத்தில் உள்ள ஏரி கால்வாயில் மண் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.

வாலாஜா ஊராட்சி ஒன்றியம் பள்ளேரி ஏரியில் இருந்து விவசாயத்துக்கு மண் எடுக்க கலெக்டர் உத்தரவின்படி கனிம வளத்துறையினர் அனுமதி வழங்கிய பிறகும், வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகம் தரப்பில் அனுமதி வழங்காமல், விவசாயிகளை அலைக்கழிப்பு செய்கின்றனர். விவசாயிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.

நீலகண்டராயன்பேட்டையில் போதிய இடவசதி உள்ளது. அங்கு நிரந்தர நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

நடவடிக்கை

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்:- விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதில், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் பங்கேற்றனர்.


Next Story