விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம்


விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் வினியோகம்
x

வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ராமநாதபுரம்


வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் வினியோகிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

நெல் ரகங்கள்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய நெல் ரக விதை உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த பாரம்பரிய நெல் ரகங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலுக்கு வலிமை தரும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான பூங்கார், 60-ம் குறுவை மற்றும் தூய மல்லி விதைகள் 7,100 கிலோ அளவுக்கு வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.​

மானிய விலையில்

பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயி களுக்கு 50 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்படும். 80 சதவீதம் பொது பிரிவு விவசாயிகளுக்கும் 20 சதவீதம் பட்டியல் இன பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப் படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தின் மூலம் மரபுசார் நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு ஆர்வமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் பெற்று, சாகுபடி செய்து பயன் பெறலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story