50 சதவீதம் மானியத்தில் விதை நெல் வழங்க வேண்டும்
சம்பா சாகுபடிக்கு 50 சதவீதம் மானியத்தில் விதை நெல் வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு 50 சதவீத மானியத்தில் விதை நெல் வழங்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்க பாதுகாப்பு தலைவர் திருக்கடையூரை சேர்ந்த ராமமூர்த்தி கூறுகையில் -குறுவை சாகுபடிக்கு தொகுப்பு திட்டம் வழங்கியதை போல் சம்பா சாகுபடிக்கும் தொகுப்பு திட்டம் முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி ஆயத்தப் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். நடவு பணியில் சாகுபடி செலவுகள் அதிகமாக ஆவதாலும், மேட்டூர் அணை நீர் இருப்பு குறைவாக இருப்பதாலும் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபடுகிறார்கள். இந்த மாதம் கடைசி வாரத்தில் விவசாயிகள் விதைப்பு பணிகளை தொடங்க உள்ளனர். எனவே முன்கூட்டியே விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்கவும், தேவையான அளவு தரமான நெல் விதைகளை 50 சதவீதம் மானியத்தில் வழங்கவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். அதேபோல இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தேவையான உயிர் உரங்கள் மற்றும் யூரியா, டி.ஏ.பி. போன்ற அத்தியாவசிய உரங்கள் தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு தர வேண்டும் என்றார்.